
சென்னை, டிச.25
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு தனியார் ஆம்னி பஸ்களுக்கு இணையாக 20 சொகுசுப் பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களிடம் 20–ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன. விரைவுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கோவை மற்றும் சேலம் ஆகிய கோட்டங்களும், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஆகிய பிரிவுகள் உள்ளன.
இவற்றில் அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் மட்டும் 300 கி.மீ. மேல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அண்டை மாநிலங்களுக்கும் பஸ்களை இயக்குகின்றனது.
விரைவுப்போக்குவரத்துக் கழகத்தின் மூலம் சொகுசு பஸ்கள் இயக்கப்பட்டாலும், அவை தனியார் ஆம்னி பஸ்களுக்கு இணையாக இல்லை. இந்த குறையை போக்க பல அச்சுகளை கொண்ட சொகுசு பஸ்களை வாங்க அரசு முடிவு செய்தது.
அதன்படி முதல் கட்டமாக 20 பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. ரூ.34.30 கோடியில் வாங்கப்பட்ட இந்தப் பேருந்துகள், முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட 15 மீட்டர் மல்டி-ஆக்சில் டீசல் குளிரூட்டப்பட்ட பெட்டிகள். இவை தமிழ்நாட்டிற்குள் நீண்ட தூர வழித்தடங்களிலும், அண்டை மாநிலங்களுக்கு இடையேயான சேவைகளிலும் பயன்படுத்தப்படும்.
வார இறுதி நாட்களிலும் பண்டிகை காலங்களிலும் கட்டணங்களை கடுமையாக அதிகரிக்கும் தனியார் ஆம்னி பஸ்களுக்கு நம்பகமான மாற்றாக, பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த பிரீமியம் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் சுற்றுலா பயன்பாட்டிற்காக 5 புதிய சொகுசுப் பேருந்துகளையும் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். முன்னதாக, படுக்கை வசதி கொண்ட 150 அதிநவீன பேருந்துகளையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள 20 பஸ்கள், மதுரை, நெல்லை, திருச்செந்தூர், சேலம், தஞ்சாவூர், பெங்களூர், கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்படும்.














Leave a Reply