டெல்லி கார் வெடிப்புக்கு மூளையாக இருந்து தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த பெண் டாக்டர்!
*3 ஆண்டுகளாக திட்டமிட்டது அம்பலம் *பரபரப்பு பின்னணி தகவல்!!

லக்னோ, நவ.13
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கி போட்டுள்ளது. இதற்கிடையே தான் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய பெண் டாக்டர் ஷாகின் ஷாஹித் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது மகளிர் அமைப்பின் இந்தியப் பிரிவுக்கு தலைமை தாங்கி வந்ததாக கூறப்படும் நிலையில் அவரது பின்னணி பற்றி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் இவருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் நம்புகின்றனர்.
டெல்லியில் செங்கோட்டை அருகே மெட்ரோ ரெயில் நிலையத்தில் 1வது நுழைவு வாயிலில் நேற்று முன்தினம் மாலையில் செ்னறன ஹூண்டாய் ஐ20 கார் வெடித்து சிதறியது. இதில் 13 பேர் இறந்தனர். மேலும் 15க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாத அமைப்பினருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குறிப்பாக, பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த அமைப்பின் நிறுவனரான மசூத் அசாரை நம் நாடு தேடி வருகிறது. இப்படியான சூழலில் தான் டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் அதிர வைத்துள்ளது. டெல்லி போலீசாருடன், என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமையும் விசாரணையை தொடங்கி உள்ளது. முதற்கட்ட தகவலின்படி வெடித்து சிதறிய ஹூண்டாய் ஐ20 காரை டாக்டராக இருக்கும் உமர் என்பவர் ஓட்டி சென்றதும், கார் வெடித்ததில் அவரும் இறந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது. அதாவது கடந்த மாதம் அக்டோபர் 19ம் தேதி காஷ்மீரின் பன்போரா, நவ்காம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் மற்றும் நம் பாதுகாப்புப் படையினருக்கு மிரட்டல் விடுத்து ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு போஸ்டர்களை ஒட்டியிருந்தது. கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில், ‘ஒயிட் காலர்’ பயங்கரவாத முறைக்கு பயங்கரவாதிகள் மாறியிருக்கும் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. குறிப்பாக டாக்டர்கள் பலரும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையது பற்றிய தகவல் கிடைத்தது.
தற்போது இந்த ஒயிட்காலர்’ பயங்கரவாத குழுவை சேர்ந்த ஷாகின் ஷாஹித் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். லால்பாக்கில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது சகோதரர் டாக்டர் பர்வேஸ் அன்சாரியிடம் பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் தற்பாது ஷாகித் ஷாஹித் பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
கைதான ஷாகின் ஷாஹித் மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். கைதான ஷாகின் ஷாகித் முதலில் கான்பூரில் உள்ள கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவக் கல்லூரியில் 2006ல் இருந்து பணியாற்றினார். அதன்பிறகு அவர் 2009 மற்றும் 2010 க்கு இடையில் கன்னோஜ் அரசு மருத்துவக் கல்லூரியில் சிறிது காலம் பணியாற்றினார். 2013ல் சொல்லாமல் விடுப்பில் சென்ற நிலையில் மீண்டும் பணிக்கு வரவில்லை. அவரிடம் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் அது நடக்கவில்லை. இதனால் கடந்த 2021ல் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஷாகின் ஷாஹித்தின் தகணவர் பெயர் ஜாபர் ஹயாத். இவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர். கடந்த 2015ல் விவாகரத்து பெற்றனர். அடிப்படையில் ஷாகின் ஷாகித் அமைதியானவர் என்று பலரும் கூறுகின்றனர். இதனால் அவர் தற்போது பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்ட வழக்கில் கைதாகி இருப்பதால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இவர் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் மகளிர் பிரிவுக்கான இந்திய தலைவராக இருந்துள்ளார். இவர் ஜமாத் உல் மொமினின் என்ற பெயரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் மகளிர் பிரிவை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவில் பயங்கரவாத குழுவில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் செயல்பட்டு வந்துள்ளார். மேலும் இவருக்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் நிறுவனராக இருக்கும் மசூத் அசாரின் சகோதரி சாதியா அசாருடன் தொடர்பு உள்ளது. இந்த சாதியா அசார் தான் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பாகிஸ்தான் மகளிர் பிரிவின் தலைவராக உள்ளார். இவர் தான் நேரடியாக ஷாகின் ஷாகீத்தை நியமனம் செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சாதியா அசாரின் கணவர் யுசுப் அசாரும் ஒரு பயங்கரவாதி தான். இவர் கடந்த 1999ம் ஆண்டில் நடந்த கந்தகார் விமான கடத்தல் வழக்கில் தொடர்புடையவர். அவரை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நம் வீரர்கள் தீர்த்து கட்டினர். பஹவல்பூரில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைமையிடத்தை நம் நாட்டின் ஏவுகணைகள் தாக்கியபோது அவர் கொல்லப்பட்டார். அதுமட்டுமின்றி கைதான ஷாகின் ஷாகித்துக்கு நம் நாட்டின் எல்லையோர பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. சோசியல் மீடியா வழியாக அவர் தொடர்பில் இருந்துள்ளார். ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக ஆட்களை திரட்டும் வகையில் இந்த செயலை அவர் செய்து வந்துள்ளார். இவருக்கும் ஃபரிதாபாத்தில் கைதான டாக்டர் முஜாமில் ஷகீலுக்கும் தொடர்பு உள்ளது.
அதேபோல் முஜாமில் ஷகீலும், கார் வெடிப்பை நிகழ்த்தியதாக கூறப்படும் உமரும் ஒரே மருத்துவமனையில் பணியாற்றினர். இதனால் தான் டெல்லி கார் வெடிப்பில் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.














Leave a Reply