
சேலம் நவ 14,
தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதில் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடத்த திமுகவினர் பல்வேறு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முழுமையான தகவல் கிடைத்தவுடன் சட்டரீதியாக சந்தித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்றைய தினம் பிற்பகல் சேலம் வந்த அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியது:
பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 208 இடங்களில் முன்னிலை வைக்கிறது. இந்தியா கூட்டணி 28 இடங்களில் முன்னிலை வைப்பதாக செய்தி. தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதை சரித்திர சாதனை என்று கூட குறிப்பிடலாம். இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் பீகார் தேர்தலுக்கு முன்பு பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார்கள். எஸ்ஐஆர் நடைபெறுவது ஒரு மோசடி என்றார்கள்.
எஸ்ஐஆர் பணி என்பது உண்மையான வாக்காளர்கள் தேர்தலில் பங்கு பெற வேண்டும் என்பதன் அடிப்படையில்தான் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் திமுக உட்பட இந்திய கூட்டணியை சேர்ந்த கட்சிகள் பல்வேறு விமர்சனங்கள் செய்தது. அதை எல்லாம் மீறி தேசிய ஜனநாயக கூட்டணி 208 இடங்களில் முன்னிலை வகித்து மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.
இதிலிருந்து தெரிய வருவது உண்மையான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை எஸ்ஐஆர் பணி தேர்தல் ஆணையம் அறிவித்ததிலிருந்து திமுக மற்றும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் எதிர்த்தனர்.
அதற்குக் காரணம் வாக்காளர் பட்டியலில், பல ஆண்டுகாலம் இறந்தவர்கள் பெயர் தொடர்ந்து இடம் பெற்று வந்தது. அதைப் போன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வசிக்கின்றவர்கள், அந்தப் பகுதியில் இருந்து வேறொரு இடத்திற்கு குடிபெயர்க்கின்றார்கள். அந்த வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று வந்தனர். அதையெல்லாம் எஸ்ஐஆர் பணி மேற்கொள்ளும் போது இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள், போலி வாக்காளர்களை கண்டறிந்து அவை எல்லாம் நீக்கப்பட்டு உண்மையான நேர்மையான வாக்காளர் பட்டியல் தயார் செய்து தேர்தல் நடைபெற்றால் நியாயமான தேர்தல் நடைபெறும். அதைத்தான் நாங்கள் குறிப்பிட்டோம்.
வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தவர்கள், வாக்காளர் பட்டியல் தொடர்ந்து இடம்பெற்று வந்ததால் ஒவ்வொரு தொகுதியிலும் பல ஆயிரக்கணக்கான வாக்குகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தது. எஸ்ஐஆர் பணி மேற்கொள்ளும் போது வீடு வீடாக சென்று விசாரித்து, உரியவர்களிடம் வாக்காளர் படிவுகளை கொடுத்து பெற வேண்டும். தமிழகத்தில் எஸ்ஐஆர் பணி பல்வேறு மாவட்டங்களில் சுணக்கமாக இருந்து கொண்டிருக்கிறது. இதில் அரசாங்கம் தலையிடுகிறது. பிஎல்ஓவாக நியமிக்கப்பட்டவர்கள் நான்காவது வரை மட்டுமே படித்துள்ளார்கள். அவர்கள் எவ்வாறு வாக்காளர்களிடம் நேரடியாக சென்று எடுத்து சொல்லி பெற முடியும். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் எடுத்துக் கூறியுமே அதை சரிப்படுத்தாமல் உள்ளார்கள்.
எஸ்ஐஆர் பணி முறையாக நடைபெற கூடாது என்பதற்காக பல்வேறு அதிகாரிகள் எதிராக செயல்பட்டு வருகிறார்கள். திமுக அரசாங்கம் அவர்களுக்கு வாய்மொழி உத்தரவாக பிறப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தகுதியானவர்களை நியமிக்காததால் பல்வேறு இடங்களில் குளறுபடி இருந்து கொண்டிருக்கிறது.
இனியாவது தேர்தல் ஆணையம் விழிப்போடு இருந்து, செயல்பட்டு எந்தெந்த மாவட்ட மாநகராட்சிகளில் எஸ்ஐஆர் பணிகளுக்கு முரண்பாடாக செயல்படுகிறார்கள் என்பது கண்டறிந்து உண்மையான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியில் இடம்பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
முறையாக செயல்படாததால் குழப்பம் ஏற்படுகிறது. கால அவகாசம் போதாது என்று கூறுகிறீர்கள். தேர்தல் அறிவித்து ஒரே மாதத்தில் முடிகிறது. 30 நாட்களில் தேர்தல் அறிவித்து, வேட்பு மனு தாக்கல் செய்து, வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை முடிந்து விடுகிறது.
ஏன் ஒரு மாதத்தில் இந்த படிவத்தை கொடுத்து வாங்க முடியாது?.
இதுபோன்ற இரட்டை வாக்காளர்கள், குடி பெயர்ந்தவர்கள் என பல்லாயிரக்கணக்கான வாக்குகள் இடம் பெற்றுள்ளது. இதெல்லாம் பயன்படுத்தி திமுக கள்ள ஓட்டு, திருட்டு ஓட்டு போடுகிறார்கள்.
எஸ்ஐஆர் பணி முழுமையாக நிறைவேற்றப்பட்டு விட்டால் முறைகேடாக உள்ள வாக்குகள் அனைத்தும் நீக்கப்பட்டு திருட்டு ஓட்டு போட முடியாது. எஸ்ஐஆரை எப்படியாவது நிறுத்த வேண்டும். அதற்காக பல்வேறு காரணங்களை கட்டுகிறார்கள். இதற்கு ஒரு மாத காலம் போதுமானது.
முறைகேடாக வாக்காளர் பட்டியலில், வாக்காளர் சேர்ப்பது என்பது திமுகவிற்கு கைவந்த கலை. வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். எஸ்ஐஆர்-ஐ வைத்து எவ்வாறு இதில் சதி செய்ய முடியும். அவர்களுக்கு பின்னடைவு வந்தால் சதி என்பவர்கள், வெற்றி பெற்றால் நல்லது என்று சொல்வார்கள்.
சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு தொகுதிகளும் இறந்தவர்கள், இரட்டை வாக்காளர்கள் உள்ளிட்ட சுமார் 50 ஆயிரம் வாக்குகள் உள்ளது.
நேர்மையான வாக்காளர் பட்டியல் இடம்பெற வேண்டும். திமுக இதை விமர்சனம் செய்துகொண்டே பிஎல்ஓ உடன் வீடு வீடாக சென்று கொண்டிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் வீடியோவும் எடுத்து வைத்துள்ளோம்.
30 ஆயிரம் கோடிக்கு ஸ்மார்ட் மீட்டர் வைப்பதற்கு ஊழல் செய்வதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து அதிமுக பொதுநல வழக்கு தொடரும். திட்டமிட்டு கொள்முதல் விலையை அதிகரித்து, அதில் முறைகேடு செய்வதற்கு திட்டமிட்டு கொண்டிருக்கிறது. டெண்டர் தொடர்பான விவரங்கள் முழுமகயாக வெளியே வந்தவுடன் தவறு இருக்கும் பட்சத்தில் அதிமுக சட்டரீதியாக சந்தித்து நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர் மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.














Leave a Reply