Categories

கர்நாடக மாநில அரசின் நந்தினி நெய்யில்  கலப்படம் செய்த  ஆலை அவிநாசியில் கண்டுபிடிப்பு. ஆலைக்கு சீல் வைத்து 4 பேர் கைது.



திருப்பூர் நவ 16,
திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த சேவூர் வடுகபாளையம் பஞ்சாயத்து, ஆலங்கட்டி பாளையத்தில் செயல்பட்டு வந்த  ஆலையில், கர்நாடகவின் அரசு  நிறுவனமான ‘நந்தினி’ நெய்யில் டால்டா மற்றும் தேங்காய் எண்ணெய்,  பாமாயில் போன்ற பொருட்களைக் கலந்து கலப்பட நெய் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக, கே.எம்.எப். நிறுவனத்தின் வினியோகஸ்தர் உள்பட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.



கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பால் (கே.எம்.எப்.) தயாரிக்கப்படும் ‘நந்தினி’ நெய்யில் கலப்படம் நடப்பதாக அதன் ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் நடைபெற்ற தீவிர விசாரணையில், இந்த கலப்பட நெய் தயாரிப்பு மையம் திருப்பூரில் செயல்படுவது தெரிய வந்தது.
திருப்பூர் மாவட்டம், சேவூர் வடுகபாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆலங்கட்டிபாளையத்தில் இந்த ரகசிய ஆலை இயங்கி வந்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த கே.எம்.எப். வினியோகஸ்தரான மகேந்திரா என்பவர், இங்கு போலியான நெய் தயாரிக்கும் ஆலையை நடத்தி வந்துள்ளார்.



இந்த ஆலையில், மகேந்திரா முதலில் கே.எம்.எப்.பில் இருந்து வாங்கும் அசல் நெய்யுடன், டால்டா, பாமாயில், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து, அசல் ‘நந்தினி’ பாக்கெட்டுகளில் நிரப்பி வந்துள்ளனர். உதாரணமாக, ஐந்து லிட்டர் கொண்ட ஒரு பாக்கெட்டில், ஒரு லிட்டர் மட்டுமே அசல் நெய் என்றும், மீதமுள்ள நான்கு லிட்டரும் கலப்படப் பொருட்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
திருப்பூரில் தயாரிக்கப்பட்ட இந்த கலப்பட நெய் பெங்களூருவில் உள்ள கடைகளுக்கு வேன்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, அசல் ‘நந்தினி’ என்ற பெயரில் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த கும்பல் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மோசடியை நடத்தி, பல கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கலப்பட நெய் தயாரித்த வினியோகஸ்தர் மகேந்திரா, அவரது மகன் தீபக், திருப்பூரை சேர்ந்த விற்பனையாளர்  முனிராஜ், வேன் டிரைவர் அபி அர்ஸ் ஆகிய நான்கு பேர் கைது பெங்களூரு காவல்துறையினரால் சேவூர் காவல்துறை உதவியுடன்  கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆலையில் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவிநாசி துணை வட்டாட்சியர் கௌரி தலைமையிலான அதிகாரிகள் ஆலைக்கு சீல் வைத்தனர்.