Categories

அரூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம்-மக்களின் நீண்டநாள் கனவு நனவானது-முதல்வர் ஸ்டாலின், திருமாவளவனுக்கு நன்றி

தர்மபுரி டிச 19,

தர்மபுரி மாவட்டம் அரூரில் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைப்பிற்கான அரசாணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்கள், குறிப்பாக பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீதிச் சேவை விரைவாகவும் திறம்படவும் கிடைக்கும் என வழக்கறிஞர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசாணை வெளிவந்ததை அடுத்து, அரூர் பகுதி மக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் முதல்வர்
மு.க. ஸ்டாலின் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.



விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சமத்துவ வழக்கறிஞர் சங்க மாநில துணைச் செயலாளர்
அ. வடிவேலன் தெரிவித்ததாவது:“அரூர் மக்களின் நீண்டநாள் கனவு இன்று நனவாகியுள்ளது. இது தமிழக அரசின் நீதித்துறை மேம்பாட்டுக்கான ஒரு முக்கிய முன்னேற்றம்
”இந்த நீதிமன்றம் அமைக்க பரிந்துரை கடந்த நவம்பர் 26-ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற சமத்துவ வழக்கறிஞர் சங்க மாநில மாநாட்டின்போது முதலமைச்சருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அரூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பாலன் மற்றும் செல்வராஜி ஆகியோர் இந்த முயற்சியில் முக்கிய பங்காற்றியுள்ளனர். மேலும், திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பரிந்துரைகள் இந்த அரசாணை வெளியீட்டில் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

வடிவேலன் மேலும் கூறியதாவது:
“மாநாட்டின் போது அரூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் குறித்து மனுவாக கோரிக்கை அளித்தோம். அதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைவாக அரசாணை வெளியிட்டுள்ளது. நீதிமன்றம் அமைந்தால் பாப்பிரெட்டிப்பட்டி–அரூர் வட்டப்பகுதிகளில் நிலுவையில் உள்ள வழக்குகள் தாமதமின்றி தீர்க்கப்படும்; தொலைதூரம் செல்ல வேண்டிய அவசியம் இல்லாதபடியாகும்.”அதேபோல்,

இந்த முயற்சிக்காக அரூர் வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் உறுப்பினரும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியுமான அம்மா பானுமதி, மற்றும் முதல் தீர்மானத்தை இயற்றிய முன்னாள் சங்கத் தலைவர் அருலியார் வேடியப்பன் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சங்கத்தை வழிநடத்தி வரும் தலைவர் முத்துராஜ் மற்றும் செயலாளர் தவமணி உள்ளிட்ட வழக்கறிஞர்களும் பாராட்டப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை தொடர்ந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த செய்தி ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணையின் அடிப்படையில், இந்த கூடுதல் மாவட்ட நீதிமன்றம் இந்த மாத இறுதிக்குள்ளாகவோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.