Categories

நீண்ட நாள் கோரிக்கைக்கு உடனடி தீர்வு ஏரிமலை மலைக்கிராமத்தில் சமுதாய கிணறு மற்றும் தானியக்களம் பணிக்கு பூமி பூஜை


தர்மபுரி டிச 19,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்தின் வட்டு அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிமலை மலைக்கிராமத்தில், நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த குடிநீர் வசதி மற்றும் தானியக்களம் அமைக்கும் வேலைகள் விரைவில் தொடங்க உள்ளன.

சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் ஏரிமலை கிராம மக்கள் பெரும்பாலும் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.



பல ஆண்டுகளாக சாலை வசதி இன்றி, வனப்பகுதியை ஒட்டிய பழைய பாதை வழியாகவே அத்தியாவசிய தேவைகளுக்காக சென்று வர வேண்டிய நிலை காணப்பட்டது.

இந்த நிலையை முன்னிட்டு, இரண்டு வாரங்களுக்கு முன்பு மாவட்ட திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ் தலைமையிலான அரசு அதிகாரிகள் குழு, பென்னாகரம் மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளர் பச்சியப்பன் ஆகியோருடன் ஏரிமலை கிராமத்துக்கு சென்று, மலை கிராம மக்களுடன் நேரடியாக கலந்துரையாடினர்.



அப்போது குடிநீர் வசதி, தானியக்களம், சாலை வசதி, அரசின் இலவச வீடு போன்ற அடிப்படை தேவைகள் குறித்து கிராம மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் கவனமாக கேட்டறியப்பட்டன.

இதன் விளைவாக, கிராம மக்களின் கோரிக்கைக்கு இணங்க, இரு வாரங்களுக்குள் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வசதிக்கான சமுதாய கிணறு மற்றும் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பீட்டில் தானியக்களம் அமைக்கும் பணிகள் ஒப்புதல் பெறப்பட்டன.

இப்பணிகளுக்கான பூமி பூஜை பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) லோகநாதன் மற்றும் மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளர் பச்சியப்பன் தலைமையில் நடைபெற்று முடிந்தது.

மேலும், ஏரிமலை கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கிராம மக்கள் கோரிக்கையை தொடர்ந்து,
சாலை அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தொடர்புடைய ஆவணங்கள் வனத்துறை ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உதவி பொறியாளர் சுரேஷ்குமார், பஞ்சாயத்து செயலாளர் ராமசாமி, பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் பாரி, மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் போர்வெல் ராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சின்னசாமி, மாவட்ட பிரதிநிதி கோவிந்தசாமி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மயில்சாமி, வழக்கறிஞர் எழிலரசு, ஒன்றிய தொண்டர் துணை அமைப்பாளர் சின்னசாமி, அயலக துணை அமைப்பாளர் காவிரியப்பன், பொன்னேசன், ராஜ்குமார், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.