
கோவை டிச 19,
கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,திருப்பரங்குன்றத்தில் உயிரிழந்த பூர்ணசந்திரன் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடும், அரசு வேலை வாய்ப்பும் வழங்கி ஆதரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த சம்பவம் பாஜகவின் “மத வெறி அரசியலுக்கு முதல் களப்பலி” என்றும், இனி என்ன நடக்குமோ என்ற கவலை இருப்பதாகவும் தெரிவித்தார்.
மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தை முற்றாக அழிக்க முடிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், அந்த திட்டத்தில் காந்தியின் பெயர் இடம்பெறக்கூடாது என்ற நோக்கத்துடன் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். காந்தியடிகளை இழிவுபடுத்தும் போக்கில் பாஜக செயல்படுகிறது; நாதுராம் கோட்சேவை தேசபக்தராக கொண்டாடுகின்றனர் என்றும் விமர்சித்தார். “ஹே ராம்” என இறுதி சொல் கூறிய காந்தியின் பெயரை நீக்கி, திட்டத்திற்கு “ஜி ராம் ஜி” என பெயரிட்டிருப்பது காந்தி மீது வெறுப்பை வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.
100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாகவும், எந்த மாநிலத்திலும் ஒருவருக்கும் முழுமையான 100 நாள் வேலை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். தற்போது 125 நாளாக உயர்த்தியதாக கூறி மக்கள் ஏமாற்றப்படுவதாகவும், இந்தப் போக்கை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
இதனை எதிர்த்து வரும் 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒன்றிய வாரியாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அறிவித்தார். ஏற்கனவே இடதுசாரிகள் மற்றும் வி.சி. இணைந்து 23 போராட்டங்கள் நடத்த திட்டமிட்ட நிலையில், தற்போது திமுக, காங்கிரஸ் கட்சிகளும் இணைந்து 24ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக கூறினார். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் தானே பங்கேற்பதாகவும் தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விரைவில் தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் 234 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், அதன் பின்னர் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறினார்.
100 நாள் வேலை திட்டத்தில் 40% மாநில அரசுகள் பங்களிக்க வேண்டும் என உள்நோக்கத்துடன் கூறப்படுவதாகவும், அதனால் மாநிலங்கள் பங்கேற்க முடியாத நிலை உருவாக்கப்படுவதாகவும் விமர்சித்தார். ஒன்றிய அரசு சமஸ்கிருத மயமாக்குதல், இந்துத்துவ மயமாக்குதல், கார்ப்பரேட் மயமாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகவும், மோடி ஆட்சியில் அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தையும் குறிவைத்து செயல்படுவதாக கூறிய அவர், திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற முயற்சி நடக்கிறது என்றும், அதனை கண்டித்து வரும் 22ஆம் தேதி தனது தலைமையில் மதுரையில் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) என்ற பெயரில் வெளிநாட்டவர்களை அல்ல, நாட்டின் பூர்வீக குடிமக்களையே நீக்கும் முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தில் 80 லட்சம் பேர் வரை நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், வாக்குரிமையை பறித்து பின்னர் குடியுரிமையையும் பறிக்க முயற்சி நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி இது செயல்படுத்தப்படுவதாகவும், இது நாட்டுக்கு மிக ஆபத்தானது என்றும் எச்சரித்தார்.
முடிவில், பூர்ணசந்திரன் மறைவு மிகுந்த கவலையளிப்பதாகவும், அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த திருமாவளவன், தமிழக அரசு உடனடியாக உரிய இழப்பீடும் அரசு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார்.














Leave a Reply