
கிருஷ்ணகிரி டிச 21,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிமுக நகரச் செயலாளர் பழனி ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர்.
இதில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையாக இருந்தனர்.
பின்னர் கூட்டத்தில் பேசுகையில், கே.பி.முனுசாமி,
“தவெக (தமிழக வெற்றி கழகம்) தூய கட்சி என்று கூறப்படுகிறது.
ஆனால் அது எவ்வாறு தூய கட்சி ஆகும்? அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப்போகிறது என்பது கூட தெரியவில்லை. எந்தத் திட்டமும் தெளிவாக இல்லை,” எனக் கூறினார்.
தவெக உருவான ஆரம்பக் கட்டத்தில் அது ரசிகர்களின் கட்சியாக இருந்தது என்பதை ஏற்றுக்கொண்ட அவர், “இப்போது அந்தக் கட்சியில் பல கட்சிகளில் இருந்து வந்த சந்தர்ப்பவாதிகள் நிரம்பியுள்ளனர். வசதி, பதவி, புதிய பொறுப்பு போன்ற வாக்குறுதிக்காக வந்து சேர்ந்தவர்கள் தான் அதிகம்,” என்று விமர்சித்தார்.
“ஒருவர் லாட்டரி தொழிலில் இருந்தவர்;
முதலில் திமுக, பின்னர் விசிக, இப்போது தவெகவில் இருக்கிறார். அதேபோல், அதிமுகவில் 53 ஆண்டுகள் பதவி வகித்த செங்கோட்டையன், அமைச்சராக இருந்தவர், தலைமை வழங்கிய கட்சியையே இன்று விமர்சிக்கிறார். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி என்று பேசியவர் இப்போது ‘புரட்சித் தளபதி’ என பேசுகிறார்,” என்று அவர் சாடினார்.
தவெக ஒரு ‘தூய கட்சி’ அல்ல, பல கட்சித் தீமைகளின் கலவையாக உருவான ‘கலப்படக் கட்சி’ என்று கடுமையாக விமர்சித்த அவர், “எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு ஓடிக்கொண்டும், வசதிக்காகச் சுற்றிக்கொண்டும் இருக்கிற கூட்டம் விஜயைச் சூழ்ந்துள்ளது.
விஜய் இதை உணர்ந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்,” என எச்சரித்தார்.














Leave a Reply