
சென்னை டிச 23,
தருமபுரி மாவட்ட சிறையில் ஒரு ஆசிரியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நல்லம்பள்ளி வட்டம் குடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய மணிவண்ணன் (45) மீது, ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, மாணவி பெற்றோரின் புகாரின் பேரில், பள்ளித் தலைமையாசிரியர் சாந்தி மணி தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், மணிவண்ணன் மீது போக்சோ சட்டம் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 15ஆம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர். 16ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே அவர்மீது ஒரு போக்குவரத்து விபத்து மற்றும் மற்றொரு போக்சோ வழக்கும் நிலுவையில் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு காரணமாக ஜாமீனில் தாமதம் ஏற்பட்ட நிலையில், மணிவண்ணன் மனஅழுத்தத்தில் இருந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று (திங்கள்) இரவு சுமார் 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அவர், மருத்துவர்கள் பரிசோதிப்பதற்குள் உயிரிழந்திருந்தார் எனத் தகவல்.சம்பவத்தையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
சிறை வளாகத்தில் பரபரப்பு நிலவுகிறது.














Leave a Reply