Categories

போச்சம்பள்ளி அருகே துணிச்சலான கொள்ளை: 63 நாட்களுக்குப் பின் சிசிடிவி தடயங்களை வைத்து 4 பேர் கொண்ட கும்பல் கைது

கிருஷ்ணகிரி அக் 22,கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பூட்டிய வீட்டை உடைத்து 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹3 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில், 63 நாட்கள் தீவிரத் தேடுதலுக்குப் பிறகு 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள கெங்கிநாயக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவன் (43). கார்பெண்டராகப் பணியாற்றி வரும் இவர், தனது மனைவி சுதா (32) மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 18 (18.08.2026) அன்று சிவன் தனது குடும்பத்துடன் ஓசூருக்குச் சென்றிருந்தார்.

குடும்பத்தினர் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அன்று நள்ளிரவு 1 மணியளவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். திருடர்கள் தங்கள் முக அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, வீட்டின் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 3 சிசிடிவி கேமராக்களையும் அடித்து உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

பின்னர் வீட்டின் பீரோவை உடைத்து, அதிலிருந்த ஆரம், நெக்லெஸ், முத்துமாலை, தோடு உள்ளிட்ட 20 சவரன் நகைகள் மற்றும் ₹3 லட்சம் ரொக்கப் பணத்தைச் சுருட்டிக் கொண்டு தப்பியோடினர்.

மறுநாள் காலை, சிவனின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜனநாயகன் என்பவர் பார்த்தபோது, கேமராக்களும் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டிருப்பத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து ஓசூரில் இருந்த சிவனுக்குத் தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்து பார்த்த சிவன், வீட்டின் நகைகளும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் வனிதாமணி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்க பர்கூர் மற்றும் போச்சம்பள்ளி போலீசார் அடங்கிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள 70-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து தீவிரமாக ஆய்வு செய்தனர். அந்த ஆய்வுகளின் அடிப்படையில் கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் தங்கியிருந்த தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்துள்ள குட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு (38) மற்றும் கோகுல்ராஜ் (26) ஆகிய இருவரையும் போலீசார் முதற்கட்டமாகக் கைது செய்தனர்.

தொடர்ந்து, குட்டூர் கிராமத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த அவர்களின் கூட்டாளிகளான அர்சுணன் (38) மற்றும் திருப்பதி (36) ஆகிய இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின, இக்க கொள்ளைச் சம்பவத்தின் முக்கிய மூளையாகச் செயல்பட்டவர் பிரபு. ஆந்திராவைச் சேர்ந்த இவர், அங்கு மனைவியைப் பிரிந்து குட்டூர் கிராமத்திற்கு வந்து நாகமணி என்பவரை மறுமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

பிரபுவும் அவரது மச்சான் கோகுல்ராஜும் கட்டிட மேஸ்திரியாகப் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் பகல் நேரங்களில் வேலை செய்யும் இடங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிடுவதையும், இரவில் கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டு வீடு புகுந்து கொள்ளையடிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

கடந்த ஆகஸ்ட் 18 அன்று நள்ளிரவு கொள்ளையடித்த பிறகு, 4 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரிக்குத் தப்பியோடியுள்ளனர். அங்கு திருடப்பட்ட நகைகளை 4 சம பங்குகளாகப் பிரித்துக் கொண்டு அவரவர் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரில் 3 பேர் தர்மபுரி சிறையிலும், ஒருவர் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து முதற்கட்டமாக 10 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள நகைகளையும், ரொக்கப் பணத்தையும் மீட்பதற்காகக் குற்றவாளிகளை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கொள்ளை நடந்து 63 நாட்களுக்குப் பிறகு, சளைக்காமல் போராடி குற்றவாளிகளைப் பிடித்த காவல் துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

திரு.சகாதேவன்,போச்சம்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம்