
தருமபுரி, அக்.22
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், கம்மம்பட்டி ஊராட்சி, மூலக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது முன்னோர்கள் தருமபுரி வனச்சரகத்திற்கு உட்பட்ட பரிகம் A காப்புக்காட்டில் சுமார் 80 சென்ட் பரப்பளவு உள்ள வன நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளனர். தற்போது அந்த நிலத்தில் முருங்கை பயிர் சாகுபடி செய்து வந்தார்.
இந்நிலையில் குறிப்பிட்ட நிலம் கடந்த 1900-ம் ஆண்டு அரசால் காப்புக்காடு என அறிவிக்கை செய்யப்பட்டது என்றும், அதனை ஆக்கிரமிப்பு செய்வது 1882-ம் ஆண்டு தமிழ்நாடு வனச்சட்டத்தின்படி குற்றம் என்றும் தருமபுரி வனச்சரக வனப்பணியாளர்கள் அவரிடம் விளக்கினர்.
இதனைத் தொடர்ந்து விவசாயி தங்கராஜ், தருமபுரி வனச்சரக அலுவலர் சா.முரளி முன்னிலையில், தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் அவர்களை நேரில் சந்தித்து, தனது பயன்பாட்டில் இருந்த 80 சென்ட் வன நிலத்தை தாமாக முன்வந்து வனத்துறையிடம் ஒப்படைத்தார்.
வன நிலத்தை தாமாக முன்வந்து ஒப்படைத்த விவசாயி தங்கராஜை, மாவட்ட வன அலுவலர் மரியாதை செய்து பாராட்டு தெரிவித்தார்.














Leave a Reply