Categories

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த கலைச்சுடர்மணி விருது பெற்ற கணவன்- மனைவி



தருமபுரி, நவ. 6-

தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை பண்பாட்டுத் துறை சார்பில் 2025-2026-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கலை விருதுகள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் வழங்கப்பட்டன. இதில் மொத்தம் 17 கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

இதில் அரூர் அருகே உள்ள எச்.அக்ரஹாரம் ஊராட்சி, நெருப்பாண்டகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் கணவன்-மனைவியான ஓங்காளி – ஜெயசுதா ஆகிய இருவருக்கும் கலைச்சுடர்மணி விருதும், தலா ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

இவர்கள் இருவரும் நாட்டுப்புற கலைஞர்களின் நலன் கருதியும், நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் விதமாகவும், நாட்டுப்புற கலைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காகவும் நீண்ட காலமாக செயலாற்றி வருகின்றனர்.

மேலும், பாரம்பரிய இசை கலைகளை இளம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுப்பதிலும், தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சமூக சேவையை பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் இவர்களுக்கு கலைச்சுடர்மணி விருது வழங்கி கவுரவித்துள்ளது.

இவர்களுக்கு கிடைத்த இந்த விருது தருமபுரி மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல், அவர்கள் வசிக்கும் கிராமத்திற்கும் நற்பெயரை பெற்றுத் தந்துள்ளதாக கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

விருது பெற்ற கணவன்-மனைவி இருவரும், விருது வழங்கிய தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும், தருமபுரி மாவட்ட நிர்வாகத்திற்கும், தங்களுக்கு உறுதுணையாக இருந்த நாட்டுப்புற கலைஞர்களின் அமைப்பிற்கும் நன்றி தெரிவித்தனர்.

விருதுகளை மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் வழங்கினார். நிகழ்ச்சியில் சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் சு.சங்கரராமன், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.