
ராமநாதபுரம் அக் 30,
முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் ஒரே காரில் பயணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அண்மையில் அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். இதனை அடுத்து அதிமுகவின் கட்சிப் பொறுப்புகளில் இருந்து அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக ஒன்றிணைப்பு குறித்த செங்கோட்டையனின் கருத்துக்கு சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் முத்துராமலிங்க தேவரின் 118 ஆவது ஜெயந்தி மற்றும் 63 வது குருபூஜை இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், மதுரையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு மதுரையில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணம் செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை ஒட்டி, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக இருவரும் ஒரே காரில் பயணம் செய்துள்ளனர்.
மேலும் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக அஞ்சலி செலுத்த உள்ளனர் என்ற தகவலும் தமிழக அரசியல் சூட்டை அதிகப்படுத்தி உள்ளது.














Leave a Reply