Categories

கோவை வால்பாறை பகுதியை சார்ந்த தீ வைத்து சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழந்தார்.

கோவை வால்பாறையை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி கடந்த மாதம் தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

வால்பாறை ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் குமார் என்பவரது 13 வயது மகள் சஞ்சனா. இவர் அதே பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவியை கல்வி ரீதியாகவும் மனரீதியாகவும் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியைகள் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெற்றோரிடம் மாணவி குறித்து புகார் கூறுவோம் என ஆசிரியர்கள் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அச்சமடைந்த சிறுமி கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துள்ளார்.

45 விழுக்காடு தீக்காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 35 நாட்களுக்கு மேலாக சிகிச்சியில் இருந்த மாணவி சஞ்சனா நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆசிரியைகள் மிரட்டியதால் தற்கொலை முயற்சி செய்ததாகவும் சிறிதளவில் எதுவும் ஆகாது என நினைத்து இவ்வாறு செய்ததாகவும் மாணவி பேசும் வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்பாக மாணவியின் தந்தையிடம் பேசியபோது ஆசிரியர்களின் துன்புறுத்தலுக்கு தனது மகள் ஆளாகி இருப்பதாகவும் அவர்கள்  மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.