
சென்னை பிப் 13,
கலந்தாய்வு முடிந்தும் பணி ஆணை கிடைக்காமல் பரிதவிக்கும் 1, 429 சுகாதார ஆய்வாளர்கள்!
கலந்தாய்வு முடிந்தும் பணி நியமன ஆணைகள் கிடைக்காமல் 1, 429 சுகாதார ஆய்வாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர்கள் (நிலை-2)
பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு மருத்துவ பணியளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி) சார்பில் 14.10.2025-ல் அறிவிப்பு வெளியானது.
இதையெடுத்து, சுகாதார ஆய்வாளர் பணிக்கான தேர்வினை சுமார் 11 ஆயிரம் தேர்வர்கள் கடந்த 2025 டிசம்பர் 7 ம் தேதி கணினி வழியில், தமிழ்நாட்டில் 84 தேர்வு மையங்களை தேர்வுகளை எழுதினர்.
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற 2, 121 தேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் 2026 ஜனவரி 5 மற்றும் 6 -ம் தேதியில் சென்னையில் நடைபெற்றது.
இதையெடுத்து, ஜனவரி 20 மற்றும் 21-ம் தேதிகளில் 1, 401 பேர் கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டு, பணிபுரியும் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.
தற்போது, பணி நியமன ஆணைகளை பெறுவது மட்டுமே இறுதியாக உள்ளது.
3 ஆண்டுகள் பரிதவிப்பு :
சுகாதார ஆய்வாளர் பணிக்கான அறிவிப்புகள் கடந்த 11.7.2023-ல் ஏற்கனவே வெளியிடப்பட்டது.
ஆனால், 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்றதால் சுமார் 3 ஆண்டுகள் இந்த பணிக்கான தேர்வுகள் நடைபெறவில்லை.
தற்போது, தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) நடத்திய தேர்வுகள் முடிந்து, பணி நியமன ஆணைகள் பெறும் சூழலில், இறுதி கட்ட நேரத்தில் சிலர் ஓரிரு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்ததால் பணிநியமன ஆணைகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
கலந்தாய்வு முடிந்த நிலையில், பணி நியமன ஆணை கிடைக்காமல் தேர்வர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த இடங்களில் பணிகளை கைவிட்ட நிலையிலும், பலர் வறுமை நிலையிலும், திருமணம் முடிந்தவர்களாகவும் உள்ளனர்.
இன்னும் ஓரிரு வாரங்களில் 2026 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிப்பதுடன்,
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் சூழல் உள்ளது. எனவே, உயர்நீதிமன்ற உத்தரவு தொடர்பான பணிகளை தமிழக அரசு விரைந்து முடிக்க வேண்டும்.
3 வருடங்களுக்கு மேலாக நீதிமன்ற நடவடிக்கையால் காத்திருக்கும் சுகாதார ஆய்வாளர்களுக்கு, பணி நியமன ஆணைகளை விரைந்து வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தேர்வில் வெற்றி பெற்றவர்களின் எதிர்பார்ப்பு.














Leave a Reply