
சென்னை,நவ.1
தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி பேசியிருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அனைவருக்குமானவர் என்பதை மறந்து பேசுவதன் மூலம் அந்தப் பதவிக்கான மாண்பை இழந்துவிடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய நாள்களில் இரண்டு கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. முக்கிய தலைவர்கள் தங்களின் தீவிர பரப்புரையை தொடங்கிவிட்ட நிலையில், பீகார் தேர்தல் களம் தற்போது சூடுபிடித்திருக்கிறது.
இந்தநிலையில் பீகாரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது காங்கிரஸ், லல்லு பிரசாத் யாதவ் கட்சிகளை கடுமையாகச் சாடினார். மேலும் தமிழ்நாடு குறித்தக கருத்தையும் தெரிவித்தார்.
அதாவது தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வந்துள்ள பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்களை தி.மு.க.வினர் துன்புறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்தப் பேச்சுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒடிசா, – பீகார் என்று எங்கு சென்றாலும், பாஜகவினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதல்-அமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது ஒடிசாவின் ஆட்சி அதிகாரத்தை ஒரு தமிழரின் கையில் கொடுக்க அப்போதைய முதல்வர் நவீன் பட்நாயக் திட்டமிட்டு வருவதாக குறிப்பிட்டார்.
மேலும் பூரி ஜெகநாதர் கோவில் சாவியையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டார் என்றும் தெரிவித்திருந்தார். அப்போதும் மோடியின் பேச்சுக்கு தமிழ்நாட்டில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.
அப்போதைய முதல்வர் நவீன் பட்நாயக்கின் உதவியாளராக இருந்தவர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.














Leave a Reply