Categories

டெல்லி கார் குண்டு வெடிப்பு எதிரொலி கோவையில் முக்கிய இடங்களில் சோதனை!!!




கோவை நவ 11,
டெல்லியில் நேற்று  மாலை கார் குண்டுவெடிப்பு நடைபெற்றதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே சாலையில் சென்ற கார் திடீரென்று வெடித்து சிதறியது.

இந்த கார் குண்டுவெடிப்பில் இதுவரை 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.



மூன்று பேர் கவலைக்கிடமாக உள்ள நிலையில், 10 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், டெல்லி முழுவதும் போலீசார் மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மும்பையில் ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் இடையே தமிழ்நாட்டில் சென்னை கோவை மற்றும் மதுரையில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். இம் மாவட்டங்களில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கோவையைப் பொறுத்த வரை மத்திய ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் பயணிகளின் உடைமைகள் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

மேலும், மாநகர போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் இணைந்து, ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனையும் மேற்கொண்டு உள்ளனர்.

இன்று காலை ஹரியானாவில் சுமார் 3,000 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடைபெற்றதா ? இது பயங்கரவாத தாக்குதலா ? என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தொடங்கி உள்ளது.

சம்பவம் தொடர்பாக அனைத்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களையும், இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.