
தர்மபுரி டிச 20,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஈச்சம்பள்ளம் வனபகுதியில், பெருமளவில் மரங்கள் அழிக்கப்பட்டு அந்தப் பகுதிகள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு வருவதால் உள்ளூர் விவசாயிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
அந்தப் பகுதி காப்புக்காடாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மரங்கள் அழிக்கப்பட்டதால், காட்டு யானைகள், காட்டுப் பன்றிகள், மான் போன்ற வனவிலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு நுழைந்து சேதம் விளைவிப்பதாக கூறப்படுகிறது.
மேலும், முன்பு வனத்துறை அமைத்திருந்த யானை தடுப்பு குழிகள் JCB இயந்திரங்கள் மூலம் மூடப்பட்டதாகவும், இதன் விளைவாக யானைகள் எளிதில் கிராமங்களில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
“காடுகளை அழிப்பவர்களையும், இவ்விதமான சட்டவிரோத மாற்றத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பவர்களையும் வனத்துறை உடனடியாக கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.














Leave a Reply