
சிவகங்கை நவ 13,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் போலி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட காரில் ஐந்து ஆட்டுக்குட்டிகளைத் திருடிக் கடத்தி வந்த கணவன், மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரை காவல் நிலையச் சார்பு ஆய்வாளர் ராஜதுரை தலைமையிலான காவல்துறையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மானாமதுரை மூங்கில் ஊரணி அருகே, சாலையோரத்தில் ஃபோர்டு ஃபிகோ ரக கார் ஒன்று சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தது. காவல்துறையினர் காரின் அருகே சென்று விசாரித்தபோது, அங்கிருந்த காளிஸ்வரன் மற்றும் முத்துமாரி என்ற கணவன், மனைவி இருவரும் பதட்டத்துடன் காணப்பட்டனர். காரின் உள்ளே என்ன இருக்கிறது என்று கேட்டு, திறந்து காட்டுமாறு காவல்துறையினர் கேட்டனர். அதற்கு அவர்கள், “இப்போது திறக்கிறேன்” என்று கூறிவிட்டு, திடீரென காரை எடுத்துக் கொண்டு வேகமாகப ஒட்டி சென்றனர் இதையடுத்து காவல்துறையினர் அந்தக் காரைத் துரத்திச் சென்றனர்.

சில நிமிடங்களில் மானாமதுரை தேவர் சிலை அருகே, அந்தத் தம்பதியினர் காரை விட்டுவிட்டு ஓடிவிட்டனர். உடனடியாக காவல்துறையினர் காரைச் சோதனை செய்தனர். அதில், ஐந்து ஆட்டுக்குட்டிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், காரில் பொருத்தப்பட்டிருந்த நம்பர் பிளேட் போலியானது என்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
உடனே சுதாரித்த காவல்துறையினர், ஓடிய தம்பதியினரைத் தேடிப் பிடித்து மானாமதுரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரம் பகுதியில் இருந்து ஆடுகளைத் திருடி வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த இடம் பரமக்குடி காவல் வரம்புக்குள் வருவதால், மானாமதுரை காவல்துறையினர் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளைச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு விரைவில் ஒப்படைக்க உள்ளனர். போலி நம்பர் பிளேட் பொருத்திய காரைப் பயன்படுத்தி ஆட்டுக்குட்டிகளைக் கடத்தி வந்த இந்த நூதன திருட்டுச் சம்பவம் மானாமதுரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














Leave a Reply