Categories

அரூர் அருகே 40 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்- மீண்டும் திறக்கப்பட்ட வழிப்பாதை  கிராம மக்கள் வருவாய்த் துறையினருக்கு நன்றி


தர்மபுரி டிச 20,
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த அச்சல்வாடி அருகே உள்ள ஒடசல்பட்டி கிராமத்தில் சுமார் நாற்பது ஆண்டுகளாக வழிப்பாதை ஆக்கிரமிப்பு பிரச்சினை நிலவி வந்தது. கடந்த 22 மாதங்களுக்கு முன்பு, பாதிக்கப்பட்ட தரப்பினர் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டிருந்தது. எனினும், நீண்டகாலமாக அந்த உத்தரவு நடைமுறைக்கு வராததால், கிராம மக்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.



இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் R.கவிதா ஆகியோரின் தலைமையில் வருவாய்த் துறையினர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, ஓடசல்பட்டி கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பழைய வழிப்பாதையை மீண்டும் திறந்து வைத்தனர். இதற்காக இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, பெரும் தடைகள் அகற்றப்பட்டன.
பாதை திறக்கப்பட்டதை தொடர்ந்து, நீண்டநாள் அவலத்திலிருந்து விடுபட்ட கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வருவாய்த் துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

சிலர் அதிகாரிகளின் காலில் விழுந்து ஆழ்ந்த நன்றியை வெளிப்படுத்திய காட்சி அனைவரின் இதயத்தையும் தொட்டது.

இந்த நிகழ்வு, மக்களின் நீண்டநாள் போராட்டத்திற்கு பிறகு அரசுத் துறை நடவடிக்கையாக நிறைவேற்றப்பட்ட சிறப்பான சமூக வெற்றியாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.