Categories

தொப்பூர் அருகே தொடர் விபத்து: 4 பேர் பலி – 3 பேர் படுகாயம்


தர்மபுரி டிச 16,
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே இன்று  அதிகாலை நடைபெற்ற பயங்கர சாலை விபத்தில்
4 பேர் உயிரிழந்தும், 3 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர்.


தருமபுரி–சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தொப்பூர் கணவாய் மலைப்பகுதியில் சேலம் நோக்கி சென்ற ஒரு லாரி, அதற்கு முன்னால் சென்றிருந்த மற்றொரு லாரியுடன் மோதியது. இதன் பின்னர் அந்த லாரிகளின் பின்புறம் வந்த இருசக்கர வாகனம், ஆம்னி வேன் மற்றும் கார் மீது மோதி தொடர் விபத்து நடைபெற்றது.



இந்த விபத்தில் தம்மணம்பட்டியை சேர்ந்த அருணகிரி, மாதேமங்கலத்தை சேர்ந்த கலையரசி, சங்கரியை சேர்ந்த முனியப்பன் மற்றும் தினேஷ் ஆகிய நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



மேலும் மூவர் படுகாயமடைந்தனர்அவர்களைத் தொப்பூர் காவல்துறையினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விபத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருபுறத்திலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.



பின்னர் காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் இணைந்து போக்குவரத்தை சீரமைத்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். சதீஷ், இநேரில் சென்று விபத்து நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்தார்.

அவருடன் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சி.க. ஜெயதேவ்ராஜ், இந்திய தேசிய நெடுஞ்சாலை குழுத் தலைவர் ரவி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதிகாரிகள், அந்த பகுதியில் தொடர்ந்து நடைபெறும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் சாலை அமைப்பு, பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

விபத்துக்குள்ளான இடத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்த ஆட்சித்தலைவர் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொப்பூர் காவல் துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பிடத்தக்க வகையில், இதே இடத்தில் கடந்த 2020 டிசம்பர் மாதத்திலும் இதேபோன்ற தொடர் விபத்து ஒன்று நிகழ்ந்திருந்தது.