Categories

பொங்கல் பரிசுத் தொகுப்புடன்
ரூ.3 ஆயிரம் ரொக்கம் வழங்க தமிழக அரசு பரிசீலனை!


சென்னை, டிச.23,
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் ரொக்க பணம் வழங்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் வாய்ப்பு உள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற ஜனவரி 14–ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக இப்போதே மக்கள் தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையே ஆண்டுதோறும் பொங்கலுக்கு முன்னதாக தமிழக அரசு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகிறது. முன்பு ஒவ்வொரு அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கப் பணமும் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் கடும் நிதி நெருக்கடி காரணமாக ரூ.1,000 ரொக்கம் 2025–ஆம் ஆண்டில் வழங்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தற்போது பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம் வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஆண்டுதோறும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் மக்களிடம் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. எனவே தகுதி உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கம் வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. மேலும் ஜனவரி முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5,000 ரொக்கம் வழங்க வேண்டும் என தமிழக அரசை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.