Categories

தமிழக அரசின் திட்டங்களை முடக்குவதற்காகவே ஒன்றிய அரசு MGNREGAவை முடக்க முயல்கிறது – முன்னாள் அமைச்சர் பழனியப்பன்


சென்னை டிச‌ 24,

தமிழக திட்டங்களை முடக்க ஒன்றிய அரசு MGNREGAவை சிதைக்கிறது – பழனியப்பன் கண்டனம்


தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை முடக்குவதற்காகவே ஒன்றிய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை (MGNREGA) முடக்க முயல்கிறது என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் குற்றம்சாட்டினார்.



இத்திட்டத்தை சிதைத்து, பணிகளை சீர்குலைத்து, நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து, மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரித்து, வேலைநாட்களைக் குறைத்து, பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, திட்டப் பெயரை மாற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதற்குத் துணை போகும் அதிமுகவையும் கண்டித்து, இச்சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி,



‘மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.


பாப்பிரெட்டிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அப்போது பேசிய அவர், மாணவர்களுக்கான ‘தமிழ் புதல்வன் திட்டம்’, மகளிருக்கான மாதாந்திர ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, ‘புதுமைப்பெண் திட்டம்’ உள்ளிட்டவற்றை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருவதாகவும், இத்திட்டங்களை முடக்க ஒன்றிய அரசு MGNREGAவைத் தடை செய்கிறதாகவும் தெரிவித்தார்.