Categories

மது போதையில் சிற்றுந்துகளை இயக்கிய 3 ஓட்டுநர்கள் சிக்கினர்!
– மூவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம்!



குன்னூர், நவ. 11–

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் குன்னூர் பகுதிகளில் இயக்கப்படும் சிற்றுந்துகள் அதிவேகமாகச் செல்வதாகவும், சில ஓட்டுநர்கள் மது போதையில் வாகனங்களை இயக்குவதாகவும் போக்குவரத்து காவல்துறையினருக்குப் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து, குன்னூர் புளூ ஹில்ஸ் சர்க்கிள் அருகே போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் இன்று தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக சிம்ஸ் பூங்கா நோக்கிச் சென்ற மூன்று சிற்றுந்துகளை நிறுத்தி, அவற்றின் ஓட்டுநர்களிடம் சோதனை மேற்கொண்டனர். இதில் மூன்று ஓட்டுநர்களும் மது போதையில் வாகனங்களை இயக்கியது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை மீறியதாக மூன்று ஓட்டுநர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

### மலைப்பாதைகளில் விபத்து அபாயம்!

நீலகிரி மாவட்டத்தில் கொண்டை ஊசி வளைவுகள், குறுகிய சாலைகள் மற்றும் செங்குத்தான மலைப்பாதைகள் அதிகம் உள்ளன. இத்தகைய சாலைகளில் மது போதையில் வாகனங்களை இயக்குவது பயணிகள் மட்டுமின்றி எதிரே வரும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகளின் உயிருக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

குறிப்பாக, குன்னூர் மற்றும் உதகை பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சிற்றுந்துகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சிற்றுந்துகள் உள்ளிட்ட அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் காவல்துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொள்ள வேண்டும். அதிவேகம் மற்றும் மது போதையில் வாகனம் இயக்குதல் போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.