
தர்மபுரி டிச 12,
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே நடந்த சட்டவிரோத கருக்கலைப்பில் பெண் உயிரிழந்த வழக்கில், போலீசார் கணவர் உட்பட மூவரை கைது செய்துள்ளனர்.
ஏரியூர் அருகே பூச்சூரை கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்றவர், ரம்யா (26) என்பவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில் ரம்யா மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.
டிசம்பர் 1ஆம் தேதி ரம்யா மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக அவரது கணவர் கண்ணன் உறவினர்களிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும், ரம்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் ஏரியூர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், ரம்யா கர்ப்பிணியாக இருந்தபோது, கண்ணன் குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் மூலம் பரிசோதிக்கச் செய்து, குழந்தை பெண் என தெரியவர, ஓமலூரை சேர்ந்த செவிலியர் சுகன்யா மற்றும் புரோக்கர் வனிதா ஆகியோரின் உதவியுடன் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.
கருக்கலைப்பின் போது ரம்யாவுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், முதலில் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கோயமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பும் வழியில் அவர் உயிரிழந்தார்
இதையடுத்து, போலீசார் ரம்யாவின் கணவர் கண்ணன், செவிலியர் சுகன்யா (35), புரோக்கர் வனிதா (35) ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்..
இந்த சம்பவம் ஏரியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














Leave a Reply