
கோவை நவ 8,
அதர்ஸ் என்ற திரைப்படத்தின் கலைஞர்கள் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பில், பெண் நடிகரை இழிவுபடுத்தும் வகையில், யூடியூபர் ஒருவர் அநாகரீகமாக எழுப்பியுள்ள கேள்வியை கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
அவர் பெண் தானே, அதுவும் நடிகை தானே என்ற ஆணாதிக்க மன உளவியலின் உச்சமாகவே இந்த கேள்வியை பார்க்க வேண்டியுள்ளது. ஒரு திரைப்படத்தின் ஆக்கம், அதில் பணியாற்றிய கலைஞர்களின் அனுபவங்கள், திரையில் வெளியானவுடன் அத்திரைப்படத்தின் உள்ளடக்கம், அதன் சாராம்சம் ஆகியவை குறித்து ஒரு உரையாடலை உருவாக்குவது செய்தியாளர்களின் கடமை. செய்தியாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் இத்தகைய பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. ஆனால் சமீப காலமாக உருவாகியுள்ள யூடியூப் சேனல்களின் பெருக்கம், வியூஸ்களையும், லைக், ஷேர்களையும் மட்டுமே நோக்கமாக கொண்டு இயங்குவதால், இவர்களிடம் இந்த அடிப்படை ஊடக அறத்தை எதிர்நோக்க முடியாத நிலை உருவாகிவிட்டது.
அதனை சாதமாக பயன்படுத்திக்கொள்ளும் நோக்கிலேயே, அதர்ஸ் திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் , யூடியூபர் ஆர்.எஸ்.கார்த்திக் என்பவர் பெண் நடிகர் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வியை முன்வைத்துள்ளார். அவர் எழுப்பிய ‘நடிகையின் எடை என்ன?’ என்ற கேள்வி எவ்வளவு இழிவானது என்ற அடிப்படை புரிதலே இல்லாமல் அவர் பெண் நடிகர் செல்வி.கெளரி கிஷனிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்தது அதைவிட இழிவான செயலாகும். இதனை கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
செய்தியாளர்கள் போர்வையில் இது போன்ற நபர்கள், இது போன்ற இழிவான செயல்களில் ஈடுபடுவதை ஒரு போதும் கடந்து செல்ல முடியாது. சம்பந்தப்பட்ட நபர் எவ்வித நிபந்தனையுமின்றி, பொதுவெளியில் செல்வி.கெளரி கிஷனிடன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோயமுத்தூர் பத்திரிகையாளர் வலியுறுத்துகிறது. இந்த விவகாரத்தில் மற்றொரு சம்பவத்தையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. கெளரி கிஷனை தவிர வேறு பெண்கள் யாருமே இல்லாத அந்த செய்தியாளர் சந்திப்பில், இரண்டு யூடியூபர்கள் அவருடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்து, கடுமையாக பேசிக்கொண்டிருந்த போது, கெளரி தனியாக அதனை மிகவும் திடமாகவும், மிகுந்த நாகரீகத்துடன் அவர்களை எதிர்கொண்டு பதிலளித்துக்கொண்டிருந்தார். அதற்காக கெளரி கிஷனை பாராட்டும் அதே வேளையில், அங்கிருந்த சக செய்தியாளர்களும், திரைப்பட குழுவினரில் இருந்த ஆண்களும் அவருக்கு ஆதரவாக எதுவும் பேசாமல் இருப்பதை பார்க்கும் போது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.
பெண்கள் மீதான வன்கொடுமைக்கு சமமான இந்த நிகழ்வில், சக செய்தியாளர்கள், யூடியூபரின் கருத்துக்கு எதிர்வினையாற்றி இருக்க வேண்டும் என கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. சமூக கொடுமைகளுக்கு எதிராக பக்கம் பக்கமாக கட்டுரைகளை எழுதுவதை விட, அந்த சமூக கொடுமைக்கு எதிராக களத்திலேயே குரல் கொடுத்த எண்ணற்ற மூத்த செய்தியாளர்களின் வழியினை தற்போது களத்தில் இருந்து செய்தியாளர்கள் செயல்படுத்திட வேண்டும் எனவும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுகிறோம்.
இந்த தருணத்தில் செய்தியாளர்கள் போர்வையில் இருந்த யூடியூபர்களால் மன உளைச்சலுக்கு ஆளான கெளரி கிஷனுக்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் தனது ஆறுதலையும், தார்மீக ஆதரவையும் அளிக்கிறது.














Leave a Reply