Categories

விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பாரத பிரதமர் கோவை வருகை தருகிறார் – மாநாட்டு குழு தலைவர் பி.எச்.பாண்டியன் பேட்டி

கோவை நவ 18,

கோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற 19ம் தேதி  தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இம்மாநாட்டை துவக்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மாநாட்டு குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று மாநாட்டில் கலந்து கொள்வதற்கு பிரதமர் மோடி கோவை வருகிறார்  12 மணியளவில் மாநாட்டிற்கு வருவார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

ஒட்டுமொத்த உலகமும் திரும்பிப் பார்க்கும் வகையிலான மாநாடாக இந்த மாநாடு அமையவிருக்கிறது என்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இயற்கை விவசாயத்தை மேற்கொள்பவர்கள், இயற்கை விவசாயத்தை அறிமுகம் செய்த நம்மாழ்வார் அவர்களோடு பணியாற்றிய விவசாயிகள் ஆகியோருடன் பிரதமர் கலந்துரையாட உள்ளார் என்றார்.

இந்த கலந்துரையாடலில் இயற்கை விவசாயம் சார்ந்த கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு நல்வாய்ப்பாக அமையும் என தெரிவித்த அவர்
இம்மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பிரதமர் இயற்கை விவசாயிகள் சார்பில் அமைக்கப்பட்ட பிரத்யேக அரங்குகளையும், விவசாய உற்பத்தி பொருட்களையும் பார்வையிட உள்ளதாக தெரிவித்தார்.

பிரதமரிடம் இயற்கை வேளாண் பொருட்கள் தயாரிப்பு, தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து விவசாயிகள் எடுத்துரைக்க உள்ளனர். இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கலந்து கொள்வார்கள் மொத்தமாக பிரதமர் வரும் வளாகத்தில் 5000 விவசாயிகள் பங்கேற்பார்கள் அந்த அளவிற்கு தான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

வேளாண் விஞ்ஞானிகள் இதில் கலந்துகொண்டு உற்பத்தியை பெருக்குதல் மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடக்கிய அறிக்கை தயார் செய்து வழங்க உள்ளனர். அது இயற்கை விவசாயம் சார்ந்த கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு ஏதுவாக இருக்கும் என கூறினார். மேலும் இயற்கை விவசாயத்தில் சாதனை புரிந்துள்ள 10 விவசாயிகளுக்கு பிரதமரால் விருதுகள் வழங்கப்பட உள்ளது என்றார். இந்நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 200 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது என்றும் இதனை விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பார்வையிடலாம் அனுமதி இலவசம் என்றார்.

இயற்கை விவசாயம் என்பது மண் வளத்தை பெருக்கி நஞ்சில்லாத உணவுகளை உற்பத்தி செய்ய நோயின்றி மனிதர்கள் வாழவும் வழிவகுக்கிறது என்றும் பிரதமர் நேரடியாக இந்நிகழ்வில் விவசாயிகளோடு கலந்துரையாட உள்ளதால உரிய கொள்கை முடிவுகள் வகுக்கப்படும் என கருதுகிறோம் என்றார்.
இது முழுக்க முழுக்க விவசாயிகள் நடத்தும் மாநாடு எந்த அரசியல் சார்பும் கிடையாது. இதில், கலந்து கொள்வதற்காக மாநில முதலமைச்சர்கள் உட்பட யாருக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்படவில்லைஎன தெரிவித்தார்.

மேலும் காவல்துறை நடவடிக்கைக்கு பொதுமக்களும் விவசாயிகளும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். மத்திய விவசாய அமைச்சர் இரண்டு முறை சந்தித்து பேசி உள்ளதாக தெரிவித்த அவர் அவரின் வருகை எப்படி என்று தெரியவில்லை பிரதமர் கவனத்திற்கு எங்களுடைய சந்திப்பு எடுத்து சொல்லி இருப்பார் என நம்புகிறோம் என கூறினார்.

விவசாயிகள் காட்சிபடுத்தும் அரங்கில் பிரதமர் அவருக்கு எது பிடித்தாலும் எடுத்து கொள்ளலாம் என்றும் நினைவு பரிசு வழங்குவதற்கு சில கட்டுபாடுகள் இருப்பதால் அதனை பரிசீலனை செய்து கட்டுபாடுகளுக்கு உட்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.