
சென்னை டிச 23,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் ஒன்றியத்தின் கீழ் வரும் ஏமனூர் கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் பட்டா வழங்க கோரி வனப்பகுதியில் குடியேறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
ஏமனூர் கிராமத்தில் தற்போது 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

மேட்டூர் அணை கட்டுமானம் நடைபெற்ற காலத்தில் அங்கிருந்த மக்களை அரசே இப்பகுதிக்கு மாற்றி வசிப்பிட நிலம் அளித்து குடியேற்றியது.
கடந்த 91 ஆண்டுகளாக இப்பகுதியில் வசிக்கும் இக்கிராம மக்கள், தங்கள் குடியிருப்புக்கும் விவசாய நிலங்களுக்கும் உரிய பட்டா வழங்கக் கோரி பல முறை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக 1997ஆம் ஆண்டு சுமார் 450 வீடுகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது.
பின்னர், இப்பகுதியை அடிப்படையாக கொண்டு குடிநீர், மின்சாரம், ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அரசு வழங்கியது.
மேலும், 2017ஆம் ஆண்டு ஏமனூர் – நெருப்பூர் இடையே சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் தார் சாலை அமைக்கப்பட்டது.எனினும், சமீபகாலமாக அரசு அதிகாரிகள், ஏமனூர் பகுதியில் வழங்கப்பட்ட பட்டாக்கள் செல்லுபடியாகாது என்றும் இதில் குடியேறும் மக்களுக்கு சட்டப்படி நிலப் பட்டா இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனால் அரசு திட்டங்கள், குறிப்பாக சிமெண்ட் சாலைகள், இலவச வீட்டு நிலப் பிரிவுகள் உள்ளிட்டவை இப்பகுதியில் அமல்படுத்தப்பட முடியவில்லை.இதனை கண்டித்த ஏமனூர் கிராம மக்கள்,
“நூறு ஆண்டுகளாக வசித்து வருகிறோம்;
இருந்தும் பட்டா வழங்கப்படவில்லை” எனக் கூறி, மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து
திருவோடு ஏந்திய ஊர்வலமாக சென்று வனப்பகுதியில் குடியேறி காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கினர்.
கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த போராட்டம் தொடர்கிறது.















Leave a Reply