Categories

நூறு நாள் வேலைத் திட்டத்தை சிதைப்பதாகக் குற்றச்சாட்டு: அரூரில் திமுக கூட்டணி கட்சிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை டிச 24,
மத்திய பாஜக அரசு 100 நாள் வேலைத் திட்டத்தை (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்) முடக்குவதாகவும், அத்திட்டத்தைச் சிதைக்கும் வகையில் செயல்படுவதாகவும் கூறி, தர்மபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் (BDO Office) முன்பு திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.




இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK), மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் (CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM), மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தர்மபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் சி.கே. சாக்சன் சர்மா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காமல் வஞ்சிப்பதாகவும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும் அவர் கடுமையாகச் சாடினார்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக,


தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி கண்டன உரையாற்றினார்.

அவர் தனது உரையில்:
“மத்திய பாஜக அரசு கிராமப்புற பொருளாதாரத்தைச் சிதைக்கும் நோக்கில் செயல்படுகிறது. ஏழை மக்களின் வயிற்றிலடிக்கும் செயலை ஒன்றிய அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்,” எனத் தெரிவித்தார்.


இந்த எழுச்சிமிகு போராட்டத்தில் கூட்டணி கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய, கிளைப் பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.