
ஓமலூர் அக் 14,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் தற்போது பரவலாக பேசப்படுவது, தமிழக அரசு மின்சாரம் கொள்முதல் செய்வதில் நடந்துள்ள ஊழல் குறித்துதான். ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் 11 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறி, இந்த அரசு அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து வெள்ளை அறிக்கை வெளியிட்டது. கடந்த மே 23 முதல் ஜூன் 26 வரையிலான முந்தைய ஆட்சியின் ஒப்பந்தங்களில் முறைகேடு இருப்பதாகக் கூறி ரத்து செய்தனர்.
ஆனால், இந்தியாவிலேயே எந்த மாநிலமும் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யவில்லை. த.வெ.க. அரசாங்கம் தற்போது 5 நிறுவனங்களிடம் இருந்து சுமார் 4,400 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே அதிக கடன் இருக்கும் போது, இவ்வளவு விலை கொடுத்து வாங்குவது ஏன்?
திட்டமிட்டு நான்கு மாதங்களாக கடுமையான மின்வெட்டை ஏற்படுத்தி, மக்கள் எப்படியாவது மின்சாரம் கிடைத்தால் போதும் என்ற சூழலை உருவாக்கி, செயற்கையாக மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, ஒரு யூனிட் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்வது கண்டிக்கத்தக்கது. இது ஒரு மெகா ஊழல் என்றே கூறலாம்.
ஆந்திராவில் அக்டோபர் மாதம் 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை ஒரு யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் த.வெ.க. அரசு 35 ரூபாய் கொடுத்து வாங்குவதில் மிகப்பெரிய சந்தேகம் உள்ளது. இதுகுறித்து பல அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஒரு கிலோ அரிசி 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. பருப்பு, எண்ணெய், புளி என அனைத்து உணவுப் பொருட்களின் விலையும், காய்கறிகளின் விலையும் உயர்ந்துவிட்டது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசியை குறைக்க அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், உணவுத்துறை அமைச்சர் வேண்டுமென்றே அவதூறு பரப்புவதாக கூறுகிறார். இது நிர்வாகத் திறமையற்ற அரசு என்பதற்கு உதாரணம்.
பணபலம், அதிகார பலம் ஆகிய இரண்டையும் வைத்துதான் த.வெ.க. வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணியை ‘கல்லாப்பெட்டி கூட்டணி’ என்று வர்ணித்தவர்கள், அந்த கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற வி.சி.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்டவர்களின் ஆதரவில்தான் த.வெ.க. அரசாங்கமே அமைந்துள்ளது.
தீய சக்தி திமுக என்று குறிப்பிட்ட கட்சியின் தலைமையில் போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவால்தான் விஜய் முதலமைச்சராகியுள்ளார். தேர்தலுக்கு முன்பு ஒன்று கூறிவிட்டு, தற்போது அந்தர் பல்டி அடிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.














Leave a Reply