Categories

அரூர் அரசு மதுபானக் கடையில் செல்போன் திருடும் கும்பல் அட்டகாசம் – புரோக்கர் மூலம் பணம் வசூல்?



தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு மது பாட்டில்கள் வாங்க வரும் மதுப் பிரியர்களின் செல்போன்களை ஒரு கும்பல் திட்டமிட்டு திருடி வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



மதுபானக் கடைக்கு வருவோரின் கவனத்தை திசை திருப்பி, அவர்களது செல்போன்களை திருடும் இந்த கும்பல், திருடிய செல்போன்களை திரும்பப் பெற வேண்டுமென்றால் அதற்காக புரோக்கர் ஒருவர் செயல்படுவதாக கூறப்படுகிறது. திருடப்பட்ட செல்போனை திரும்ப வழங்குவதற்கு, செல்போனின் மதிப்பை பொறுத்து குறைந்தபட்சம் 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுத்தால் மட்டுமே திருப்பித் தருவதாக பாதிக்கப்பட்டவர்கள் பெயர் குறிப்பிட விரும்பாமல் தெரிவிக்கின்றனர்.

இந்த கும்பல் தினமும் 1 முதல் 5 அல்லது 10 செல்போன்கள் வரை திருடுவதாகவும், பின்னர் அதே நபர்களிடமே பணம் பெற்றுக் கொண்டு திரும்ப வழங்குவதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.



அரூர் அரசு மதுபானக் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் முறையாக பராமரிக்கப்படாமல்  இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு செல்போன் திருடும் கும்பல் திருட்டில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளதா, இல்லையா என்று கேட்டால், அதற்குரிய பதிலை கடை ஊழியர்கள் சொல்ல மறுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் செல்போன் திருட்டு கும்பலுக்கும், மதுபானக் கடை ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

*செல்போன் திருட்டு குறித்து அரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றால், புகாரை வாங்க மறுப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்*

*உயிருக்கு பாதுகாப்பு இல்லை – ஊழியர்கள் பகீர் தகவல்*

இது குறித்து அரசு மதுபானக் கடையில் பணிபுரியும் பணியாளர்களிடம் சக மனிதராக கடைக்குச் சென்று நேரடியாக விசாரித்த போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கடையில் இருக்கும் சிசிடிவி செயல்படுகிறதா, இல்லையா என்று கேட்டதற்கு, அது செயல்படுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர். அப்படி என்றால் செல்போன் திருட்டு குறித்து ஏன் காவல்துறைக்கு தகவல் சொல்ல மறுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “வெளியே சொன்னால் எங்களது உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லை. சொல்வது தெரிந்தால் எங்களை அடிப்பதாக மிரட்டல் விடுக்கின்றனர்” என்று தெரிவித்தனர்.

இது குறித்து வெளியே தெரிந்தால் கூட தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அரசு மதுபானக் கடையில் பணிபுரியும் பணியாளர்கள் தங்களுடைய தகவல்களை மறைமுகமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சிசிடிவி கேமராக்களில்
பதிவாகியுள்ள, செல்போன் திருட்டு கும்பலை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி ஆசிரியர் :-
பொ.இளம்கனல்
+919942030530