Categories

கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது



*தர்மபுரி, நவ. 5-*

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மேக்லாம்பட்டி கிராமத்தில், மைதிலி என்பவரின் வீட்டில் சட்டவிரோதமாக கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிவதாகவும், பெண் சிசுவாக இருந்தால் கருக்கலைப்பு செய்வதாகவும் தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடந்த அக்டோபர் 10-ம் தேதி மருத்துவக் குழுவினர் மேக்லாம்பட்டி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு வீட்டிற்கு கர்ப்பிணி பெண்கள் சென்று வருவதை கண்ட மருத்துவக் குழுவினர், அந்த வீட்டிற்குள் அதிரடியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறியப்பட்டு, பெண் சிசு என தெரிந்ததால் கருக்கலைப்பு செய்ய முயன்றது தெரிய வந்தது. மேலும் பென்னாகரத்தை சேர்ந்த ஒரு கர்ப்பிணியும், பெங்களூருவை சேர்ந்த மற்றொரு கர்ப்பிணியும் சிசுவின் பாலினம் கண்டறிய காத்திருந்தனர்.

இதையடுத்து சிசுவின் பாலினம் கண்டறிந்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த வடிவேலு (36) மற்றும் பென்னாகரம் அடுத்த ரங்காபுரத்தை சேர்ந்த செவிலியர் பரிமளா (30) ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ஸ்கேன் கருவிகள், மருந்துகள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து பாலக்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மருத்துவர் பாலசுப்ரமணியம் கொடுத்த புகாரின் பேரில், வடிவேலு, பரிமளா மற்றும் புரோக்கர்களான சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கனகவள்ளி, மேச்சேரியை சேர்ந்த மகாலட்சுமி மற்றும் சட்டவிரோத செயலுக்கு வீடு வழங்கிய மைதிலி ஆகியோர் மீதும் பாலக்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

வடிவேலு, பரிமளா மீது ஏற்கனவே கருக்கலைப்பு குற்றம் தொடர்பாக 3-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில், அவர்களின் தொடர் சட்டவிரோத செயல்பாடுகளை தடுக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கே.அருண் கபிலன் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அதன்படி வடிவேலு சேலம் மத்திய சிறையிலும், பரிமளா வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டனர்.