
தர்மபுரி அக் 23,
பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடி சோதனை – கணக்கில் வராத ரூ.59 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் – ஆன்லைன் பரிவர்த்தனையில் ரூ.1.33 லட்சம் குறித்து தீவிர விசாரணை

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத 59 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பேரூராட்சி அலுவலக ஊழியர் ஒருவரின் ஜி-பே கணக்கில் பெறப்பட்டதாகக் கூறப்படும் 1 லட்சத்து 33 ஆயிரத்து 540 ரூபாய் தொடர்பான பணப் பரிவர்த்தனைகள் குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் கட்டிட அனுமதி வழங்குதல், குடிநீர் இணைப்பு பெறுதல் உள்ளிட்ட பணிகளுக்காக லஞ்சம் கேட்கப்படுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு ரகசியப் புகார்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், தருமபுரி லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் பெருமாள் தலைமையிலான போலீசார், பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் இன்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையின்போது, அலுவலகத்தின் முக்கிய ஆவணங்கள், கோப்புகள் மற்றும் பணப் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்தனர். அலுவலகத்தில் இருந்த பணம் மற்றும் வரவு, செலவு கணக்குகள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், சோதனை நடைபெறுவது வெளியே தெரியாத வகையில் அலுவலகத்தின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்குத் திரைகள் போட்டு மூடப்பட்டன.
பொதுமக்கள் யாரும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையின் முடிவில், உரிய கணக்கில் காட்டப்படாததாகக் கூறப்படும் 59 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்புப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, பேரூராட்சி அலுவலக ஊழியர் ஒருவரின் ஜி-பே கணக்கில் சுமார் 1லட்சத்து 33 ஆயிரத்து 540 ரூபாய் பெறப்பட்டதாகக் கூறப்படும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தப் பணப் பரிவர்த்தனைகள் எதற்காக மேற்கொள்ளப்பட்டன? யாரிடமிருந்து பணம் பெறப்பட்டது? பேரூராட்சி அலுவலகப் பணிகளுக்கும் இந்தப் பரிவர்த்தனைகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது.
இதுதொடர்பாக, பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் கணக்காளர் பத்மாவதி ஆகியோரிடமும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பேரூராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதும், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடைபெறுவதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் செய்தியாளர்
ஜி.முனியப்பன்
செல்: 9600869772














Leave a Reply