Categories

குளிக்காடு கிராமத்தில் பள்ளி காணாத சிறுவர்கள்-இனவெறி தாக்குதலை கடந்து அடிப்படை வசதிக்காக ஏங்கும் இருளர் இன மலைவாழ் மக்கள்



தர்மபுரி டிச 9,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள குளிக்காடு மலைப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட இருளர் இன மலைவாழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.



இம்மக்கள் தென்னை ஓலை மற்றும் தார்ப்பாய் கொண்டு குடிசை அமைத்து வசிக்கின்றனர்.
பல ஆண்டுகளாக மின்சாரம் வழங்கப்படாததால் இரவு நேரங்களில் இருளில் வாழ்ந்து வருகின்றனர். இதனால் விஷ ஜந்துக்களின் அச்சத்துடன் உயிர் ஆபத்தில் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.


பள்ளிக்கல்வி மறுக்கப்பட்ட சிறுவர்கள்

இந்தப் பகுதியில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு ஆதார் அட்டை இல்லாதது காரணமாக பள்ளியில் சேர்க்க முடியாமல் கல்வி இன்றிய நிலையிலேயே உள்ளனர். வெளியூரிலிருந்து வரும் கூலி தொழிலாளர்களின் குழந்தைகளுக்குப் பள்ளி கல்வி வழங்குவதாக அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கையில், இதே மாநிலத்திலுள்ள இந்த மலைவாழ் சிறுவர்கள் கல்வியளிக்கப்படாமல் தவிக்கின்றனர்.

இனவெறி தாக்குதல் குற்றச்சாட்டு


மலைவாழ் மக்கள் பஞ்சாயத்து சாலையில் நடந்து செல்வதற்கும் அருகிலுள்ள உயர் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், சில நேரங்களில் இனவெறி தாக்குதல்களும் நடக்கின்றன என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



குடிநீர் பிரச்சினை தீவிரம்

இப்பகுதி மக்களுக்கு இதுவரை ஓகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்படவில்லைமலைத் தொட்டியிலிருந்து வரும் தண்ணீர் குழாய் சாக்கடை கால்வாய்க்குள் அமைக்கப்பட்டுள்ளதால், குழாய் பழுதடைந்து ஒரு வருடத்துக்கும் மேலாக சாக்கடை நீர் கலந்து குடிநீர் வருகிறது. இதனால் பலர் ஒவ்வாமை, தோல் நோய், விஷ காய்ச்சல் போன்ற உடல் பிணிகளில் அவதிப்படுகின்றனர்.

அரசு சலுகைகள் எட்டாத மலைவாழ் மக்கள்



அரசு வழங்கும் இலவச வீட்டு மனைகள், வீடு கட்டும் திட்டங்கள், மின்சாரம், சாலை போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இதுவரை இப்பகுதிக்கு கிடைக்கவில்லை. காய்ந்த விறகுகளை சேகரித்து விற்று பெறும் சிறிய வருமானத்தில் தமக்கென சிறு நிலங்களை வாங்கியுள்ள மலைவாழ் மக்கள், இன்னும் தார்ப்பாய் குடிசைகளில் தங்கி கடினமான வாழ்க்கை நடத்துகின்றனர்.


“ஓட்டுக்குப் பிறகு எங்களை யாரும் பார்க்கவில்லை”“


அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டு கேட்டு வருகிறார்கள். அதன் பின்னர் எங்களை யாரும் கவனிக்கவில்லை. சாலை, குடிநீர், வீடு, மின்சாரம் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. மத்திய, மாநில அரசின் எந்தத் திட்டமும் எங்களுக்கு கிடைக்கவில்லை,” என மலைவாழ் மக்கள் ஏமாற்றத்துடன் தெரிவித்தனர்.