கோவை டிச 9,

ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், இதயத்தில் நிரந்தர ‘பேஸ்மேக்கர்’ (Pacemaker) பொருத்தப்பட்ட 65 வயது மூதாட்டிக்கு, மிகவும் சவாலான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பின் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
இதயத் துடிப்பு குறைபாடு காரணமாக பேஸ்மேக்கர் கருவி உதவியுடன் இருப்பவர்களுக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வது மருத்துவ உலகில் பெரும் சவாலாகக் கருதப்படுகிறது. அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் மின்சாதனங்கள், ரத்த அழுத்தம் மற்றும் உப்புகளில் ஏற்படும் மாறுபாடுகள் பேஸ்மேக்கர் செயல்பாட்டைப் மாறுபடுத்தி இதயத்தின் செயலையும் பாதிக்கும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
இதயவியல் நிபுணர் டாக்டர் வருண் பேசுகையில், “அறுவை சிகிச்சையின்போது ஏற்படும் உடல் அழுத்தத்தைத் தாங்கும் வகையில் பேஸ்மேக்கர் அமைப்புகளை (Settings) மாற்றியமைத்து, அது சீராக இயங்குவதை உறுதி செய்தோம்,” என்று தெரிவித்தார்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான மயக்கவியல் நிபுணர் டாக்டர் அபிநயா கூறுகையில், “நோயாளியின் பேஸ்மேக்கர் செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு கட்டத்தையும் கவனமாகத் திட்டமிட்டோம். இதயவியல் மற்றும் அறுவை சிகிச்சைக் குழுவினருடன் இணைந்து, நவீன கண்காணிப்பு கருவிகள் மூலம் அவரது இதயத் துடிப்பையும் ரத்த அழுத்தத்தையும் கண்காணித்து சிகிச்சையளித்தோம்,” என்றார்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு பராமரிப்பு குறித்து தீவிர சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் சிவகுமார் கூறுகையில், “புதிய கல்லீரல் மற்றும் பேஸ்மேக்கர் பொருத்திய இதயம் ஆகிய இரண்டையும் முதியவரின் உடல் ஏற்றுக்கொள்ளும் வகையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) நவீன தொழில்நுட்பங்களுடன், நோய்த்தொற்று ஏற்படாதவாறு பாதுகாத்து சிகிச்சையளித்தோம்,” என்றார்.
இந்தச் சாதனையைத் தலைமையேற்று நடத்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் இளங்கோ சேது, இதனைப் போன்ற சவாலான சிகிச்சைகள் ராயல் கேர் போன்ற பல்துறை சிறப்பு மருத்துவமனைகளில் மட்டுமே சாத்தியம் என்றும் பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைந்து செயல்பட்டதே இச்சிகிச்சையின் வெற்றிக்குக் காரணம் என்று குறிப்பிட்டார்.
இச்சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவக் குழுவினரை, ராயல் கேர் மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் க. மாதேஸ்வரன் பாராட்டினார். அவர் கூறுகையில், “சர்வதேச தரச்சான்றுகளைப் (JCI, NABH) பெற்றுள்ள ராயல் கேர் மருத்துவமனை, அர்ப்பணிப்புள்ள மருத்துவக் குழுவுடன் இணைந்து இதுபோன்ற சிக்கலான பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் (இதயம், கல்லீரல், கணையம் மற்றும் நுரையீரல்) தொடர்ந்து வெற்றிகரமாகச் செய்து வருகிறது,” என்றார்.
உடல் நலம் பெற்ற மூதாட்டியின் குடும்பத்தினர், உறுப்பு தானம் செய்த குடும்பத்தினருக்கும், மருத்துவர்களுக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.













Leave a Reply