
தர்மபுரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன் சீண்டல்:
தாய் மற்றும் மாமன் கைது செய்யப்பட்டதால் மாணவி காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சி!
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு, கஞ்சா போதையில் இருந்த வாலிபர் பாலியல் வன்சீண்டல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்குச் சென்று விட்டு, இரவு சுமார் 7:30 மணிக்கு வீட்டிற்கு திரும்பிய மாணவியை, அந்த வாலிபர் “வாடி” என்று தகாத வார்த்தைகளால் அழைத்து, தோளில் கை வைத்து வன்சீண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இது முதல் முறை அல்ல; ஏற்கனவே தொடர்ந்து தொந்தரவு செய்ததாக மாணவி தெரிவித்தார்.
ஏற்கனவே அந்த வாலிபர் அஜய் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி இடமும் இதேபோன்று நடந்ததாக கூறப்படுகிறது.
இதைப் பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, மாணவியின் தந்தை, தாய் தொந்தரவு செய்த வாலிபரை கேட்கச் சென்றனர்.
அப்போது வாலிபர் அவர்களை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த தந்தை மற்றும் தாய், பாப்பிரெட்டிபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தனர்.

காவல்துறை நடவடிக்கை மற்றும் பரபரப்பு
இதுகுறித்து புகார் அளிக்க மாணவியின் தாய் மற்றும் வெளியூரில் இருந்த மாமன் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, விசாரணை செய்யாமல் காவல்துறை நேரடியாக அவர்களைக் கைது செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்ய மறுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை அறிந்த மாணவி, கையில் விஷப் பாட்டில் வைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சி செய்தார்.
உடனடியாகக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
வன்சீண்டல் செய்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள் காவல் நிலையத்தின் முன் தர்ணா போராட்டம் நடத்தினர்.
அப்போது காவல்துறையினர் அவர்களை மிரட்டி, கைது செய்து உள்ளே தள்ளிவிடுவோம் என்று அச்சுறுத்தியதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
இதன் வீடியோவை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.தற்போது இச்சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் காவல்துறையின் செயலுக்கு எதிராக கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
வன்சீண்டல் செய்த வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காவல்துறை அதிகாரியின் விளக்கம்
இது குறித்து பாப்பிரெட்டிபட்டி காவல் ஆய்வாளர் பாரதி மோகனிடம் கேட்டபோது, இரு குடும்பங்களுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகவும், இதை மையப்படுத்தி மாணவி பாலியல் வன்சீண்டல் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார். மாணவி கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு, உண்மைத்தன்மையை அறிந்து, வன்சீண்டலில் ஈடுபட்டதாகத் தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.














Leave a Reply