Categories

SIR முகாம் தேதிகள் குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ் அறிவிப்பு

தர்மபுரி டிச 26,
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர்ப் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்-2026 பணிகள் கடந்த 04.11.2025 அன்று தொடங்கி நடைபெறுகிறது.

இதன் முதல்கட்ட வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளன.

அதன் தொடர்ச்சியாக, 27.12.2025 (சனிக்கிழமை), 28.12.2025 (ஞாயிற்றுக்கிழமை), 03.01.2026 (சனிக்கிழமை) மற்றும் 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இம்முகாம்களில் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கம், விவரங்கள் திருத்தம், பாகம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக படிவங்கள் 6, 6A, 6B, 7, 8 மற்றும் உறுதிமொழிப்படிவம் கிடைக்கும். தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிட அலுவலர்கள் பணியில் இருப்பார்கள்.

தகுதியானவர்கள் – தற்போது 18 வயது நிறைவடைந்தோர் மற்றும் 01.10.2026 வரை 18 வயது நிறைவடைய போவோர் – புதிய வாக்காளர் பதிவுக்கு படிவம் 6 மற்றும் உறுதிமொழிப்படிவத்தை உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து இம்முகாம்களில் சமர்ப்பிக்கலாம். பொதுமக்கள் தங்கள் அருகிலுள்ள வாக்குச்சாவடிகளில் இந்தத் தேதிகளில் சென்று வாக்காளர்ப் பட்டியல் சேர்க்கை, நீக்கம், திருத்தம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் “New Voters Registration” பக்கம் மூலம் ஆன்லைனாகவும் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே வாக்காளர்ப் பட்டியலில் உள்ளவர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை. தவறான தகவல்களுடன் பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

வாக்காளர்ப் பட்டியலை செம்மையாகத் தயாரிக்கவும், வலுவான ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும், வாக்கு செலுத்துவது நம் கடமை என்பதை உணர்ந்து வாக்காளராகப் பதிவு செய்வோம்.
என தருமபுரி மாவட்ட ஆட்சியர்
ரெ. சதீஸ்,  தெரிவித்துள்ளார்.

செய்தி: செய்தி ஆசிரியர், உள்ளாட்சி அரசு நாளிதழ்