
சென்னை மார் 28,
ஒற்றைவிரல் மௌனப் புரட்சி தீர்ப்பெழுதுமா? ‘கொங்கு’ கோட்டையில் சரியும் உதயசூரியன்!
சென்னை, மார்ச் 28:
தமிழக அரசியல் களத்தில் ‘சமூக நீதி’ முழக்கமிடும் திமுக, தேர்தல் என்று வரும்போது அருந்ததியர் சமூகத்தை கறிவேப்பிலையாகப் பயன்படுத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. கடந்த 2021 தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு அச்சாணியாகத் திகழ்ந்த அருந்ததியர் இயக்கங்கள், தற்போது தொகுதிப் பங்கீட்டில் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏமாற்றிய ‘உதயசூரியன்’: கைகொடுத்தவர்களுக்கு ‘கை’ விரிப்பு!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அருந்ததியர் சமூகத்தினர் சுமார் 68 சதவீத வாக்குகளை திமுகவிற்கு வாரி வழங்கியதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அந்த நம்பிக்கையில், ஆதித்தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, ஆதித்தமிழர் கட்சி போன்ற இயக்கங்கள் கடந்த ஐந்தாண்டுகளாக திமுகவின் நிழலாகவே செயல்பட்டன.
கரூரில் “அருந்ததியர் ஓட்டுகள் திமுகவுக்கே” என முழங்கிய தமிழ் புலிகள் கட்சியும், கோவையில் பிரம்மாண்ட மாநாடு நடத்திய ஆதித்தமிழர் கட்சியும் இப்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளன. முதல்கட்டப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட இந்த இயக்கங்கள், இரண்டாம் கட்டத்தில் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
44+1 தொகுதிகள்: எங்கே போனது சமூக நீதி?
தமிழகத்தில் அருந்ததியர் சமூகத்தினர் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையில் 45 தொகுதிகள் உள்ளன. குறிப்பாக மேற்கு மண்டலத்தில் வால்பாறை, அவிநாசி, பவானிசாகர், ராசிபுரம், கிருஷ்ணராயபுரம், தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் இவர்களுக்குப் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டுள்ளது.
கேள்வி எழுப்பும் தலைவர்கள்:
“கொங்கு மக்கள் தேசியக் கட்சிக்கு 2, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 என வாரி வழங்கும் திமுக, தமக்காகக் களமாடிய அருந்ததியர் இயக்கங்களுக்கு ஒரு சீட் கூட ஒதுக்காதது ஏன்? சில சமூக இயக்கங்கள் கட்சி தொடங்கினால் உடனே அங்கீகாரம் அளிக்கும் திமுக, அருந்ததியரை மட்டும் ஏன் அடிமட்டத்திலேயே வைத்திருக்க விரும்புகிறது?”
தூய்மைப் பணியாளர்கள்: ‘வாக்குறுதி’ காற்றில் பறந்தது!
தேர்தல் நேரத்தில் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்தபின் தூய்மைப் பணி, காவல் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளைத் தனியார் மயமாக்கி, அவர்களைக் ‘கொத்தடிமை’ நிலைக்குத் தள்ளியுள்ளதாகக் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
“3 சதவீத உள் ஒதுக்கீடு தந்தோம்” என மேடைக்கு மேடை முழங்கும் முதல்வர் ஸ்டாலின், தேர்தல் அரசியலில் மட்டும் ஏன் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.
‘செக் மேட்’: கொங்கு மண்டலத்தில் திமுக ‘அவுட்’?
அருந்ததியர் சமூகத்தினர் திமுகவை வழி அனுப்பி வைத்தால், அக்கட்சியின் ‘ஹாட்ரிக்’ கனவு கானல் நீராகிவிடும் என அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அருந்ததியர் வாக்கு % தாக்கம் செலுத்தும் தொகுதிகள்
ஈரோடு 18% – 22% அந்தியூர், பவானிசாகர்
திருப்பூர் 20% – 25% தாராபுரம், அவிநாசி
கோவை 15% – 18% மேட்டுப்பாளையம், சூலூர்
நாமக்கல் 16% – 20% ராசிபுரம், சேந்தமங்கலம்
நிபுணர்கள் எச்சரிக்கை:
“அருந்ததியர் வாக்குகள் என்பது வெறும் எண்கள் அல்ல; அது ஒரு சமூகத்தின் நீதிக்கான குரல். அக்குரலை திமுக அலட்சியப்படுத்தினால், கோட்டைக்குச் செல்லும் வழி அவர்களுக்கு முட்கள் நிறைந்ததாக மாறும்.”
மே 4-ல் வெளியாகும் தேர்தல் முடிவுகளில், அருந்ததியர் சமூகத்தின் ‘ஒற்றைவிரல் மௌனப் புரட்சி’ திமுகவிற்குப் பலத்த அடியைக் கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அதிருப்தியைப் பயன்படுத்தி அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகள் அருந்ததியர் சமூகத் தலைவர்களைத் தங்கள் பக்கம் இழுக்கத் தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன.














Leave a Reply