
சேலம், டிச 9,
சேலம் நகரம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க மேக்னசைட் நிறுவனத்திற்குச் சொந்தமான 184.5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, சுமார் ரூ.360 கோடி மதிப்பில் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதில் யான் கலரிங் பார்க் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் 21 சாயப்பட்டறைகளை அமைக்க கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது.இதனால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறி உள்ளூர் மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்தப் பகுதியை செவ்வாயன்று சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் நேரில்பார்வையிட்டார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:“சேலத்தில் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் சாயப்பட்டறைகள் அமைப்பதற்கான அரசின் அனுமதி நடவடிக்கை நடைபெறுகிறது. ஆனால் மண்வளம் மற்றும் நீர்வளத்தை பாதிக்கும் தொழில்கள் தமிழக நலனுக்கு பாதகமானவை. திராவிட முன்னேற்றக் கழக அரசு சுற்றுச்சூழல் சார்ந்த ஆலோசனைகளைப் பெற்று பல திட்டங்களை அமல்படுத்துகிறது; ஆனால் இத்திட்டம் மக்களின் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இத்தகைய சாயப்பட்டறைகள் இயங்க தினமும் சுமார் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

இந்தப் பகுதியில் ஏரி அல்லது ஆறு போன்ற நீர்மூலங்கள் இல்லை. இதனால் நிலத்தடி நீர் வற்றும் அபாயம் உள்ளது. மக்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும். மக்களின் எதிர்ப்பை மீறி திட்டம் செயல்படுத்தப்படுவது அரசின் பெயருக்கு நன்மையல்ல.எனவே, இத்திட்டத்தை உடனடியாக நிறுத்தி மக்களின் கருத்துக்களை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களே நிலைத்து நிற்கும். பூஜ்ஜியம் டிகிரி மாசு கட்டுப்பாட்டில் அரசு எடுத்துக் கொண்டுள்ள உறுதிகள் மக்களிடம் நம்பிக்கையை பெறவில்லை.சாயப்பட்டறைகள் மக்களுக்கு பாதிப்பு இல்லாத பகுதிகளில் அமைக்க அரசு யோசிக்க வேண்டும். மேலும் கனிம வளமிக்க மேக்னசைட் பகுதியில் இத்திட்டத்தை நிறைவேற்றுவது பொருத்தமா என்று அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துகண்ணன், மேற்கு மாநகர செயலாளர் பி. கணேசன், மாநகர குழு உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.














Leave a Reply