
அரூர், அக்.16-
தருமபுரி மாவட்டம், அரூர் அருகில் குரங்கு பள்ளம் பகுதியில் மொரப்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதி உள்ளது. இங்கு அதிக அளவில் மான்கள் உள்ளன.
சமீப காலமாக நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக, வனப்பகுதிக்குள் குடிநீர் மற்றும் தீவனம் இல்லாததால் மான்கள் அடர்ந்த காட்டை விட்டு வெளியேறி சாலையோரப் பகுதிகளுக்கு வருவது அதிகரித்துள்ளது. வனத்துறையினர் வனத்திற்குள் தண்ணீர் தொட்டி அமைக்காததே இதற்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் தண்ணீர் தேடி வந்த சுமார் 2 வயதிற்கும் குறைவான மான் குட்டி ஒன்றை, அப்பகுதியில் இருந்த தெருநாய்கள் துரத்தி கடித்தன. சாலையில் சென்ற பொதுமக்கள் நாய்களை விரட்டி மானை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதிக அளவில் கடிபட்டதால் மான் குட்டி பரிதாபமாக உயிரிழந்தது.

தகவலறிந்து மொரப்பூர் சரக வனத்துறையினர் இறந்த மானை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
*பொதுமக்கள் கோரிக்கை:*
வனத்துறையின் கவனக்குறைவால் தொடர்ந்து மான்கள் உயிரிழப்பதாக விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே வனப்பகுதிக்குள் தண்ணீர் தொட்டிகள் அமைக்கவும், ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வனத்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி ஆசிரியர்
பொ.இளம்பரிதி 9942030530













Leave a Reply