
தர்மபுரி, டிசம்பர் 27:
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் காவிரி ஆற்றில் அடிக்கடி ஏற்படும் சுற்றுலாப் பயணிகளின் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை (TNDRF) இணைந்து விரிவான ஆய்வு மேற்கொண்டன.
இந்த ஆய்வு குழுவில் பென்னாகரம் போலீஸ் துணைசூப்பிரண்டு பாலகிருஷ்ணன் (மேற்பார்வை), NDRF துணை கமாண்டன்ட்
ஸ்ரீ. வைத்தியலிங்கம், இன்ஸ்பெக்டர் விவேக் குமார் ஸ்ரீவாஸ்தவா, TNDRF உதவி கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் முரளி ஆகியோர் பங்கேற்றனர்.
கலந்தாலோசனை கூட்டம்
ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட கலந்தாலோசனை கூட்டத்தில் காவல்துறை, தீயணைப்புத் துறை, வனத்துறை, மீன்வளத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள், பரிசல் துறை ஒப்பந்ததாரர்கள் மற்றும் பரிசல் ஓட்டிகள் பங்கேற்று விவாதித்தனர்.
கூட்டத்தில் பரிசல் சவாரிகளின் போது ஏற்படும் விபத்துகள், சுழல் மிகுந்த இடங்களில் பரிசல் இயக்கத்தால் ஏற்படும் ஆபத்துகள், சுற்றுலாப் பயணிகள் குளிக்கச் செல்லும் ஆபத்தான இடங்கள், பரிசல் கட்டுமானம் மற்றும் உறுதித்தன்மை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
ஆய்வு குழு ஆலம்பாடி பரிசல் துறை, ஊட்டமலை பரிசல் துறை, முதலைப்பண்ணை எதிரே காவிரி ஆறு, கோத்திக்கல், மணல் திட்டு உள்ளிட்ட உயிரிழப்பு அதிகம் ஏற்படும் காவிரி ஆற்றின் ஆபத்தான இடங்களை நேரில் பார்வையிட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
உயிரிழப்புகளை முன்கூட்டியே தடுக்க, ஆபத்து இடங்களில் எச்சரிக்கை பதாகைகள் மற்றும் தடுப்புச் சுவர்கள் அமைத்தல், பரிசல் ஓட்டிகளுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் உறுதியான பரிசல்கள் பயன்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்துதல், தொடர் கண்காணிப்பு மற்றும் மீட்பு பயிற்சிகள் ஏற்பாடு செய்தல் போன்ற நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது.
இந்த ஆய்வின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என குழு வலியுறுத்தியுள்ளது.














Leave a Reply