Categories

உலக மாற்றுத் திறனாளிகள் தினம் 458 பயனாளிகளுக்கு   நலத்திட்ட உதவிகளை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.



திருப்பத்தூர் டிச.4

டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் விதவிதமான உடைகள்  அணிந்து மாறு வேடங்களில் அணி வகுத்து நின்று மாவட்ட ஆட்சியரை பூக்கள் கொடுத்து வரவேற்றனர். உலக மாற்றுத்  திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப் புணர்வு உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து  மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 170 வெற்றியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். 
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான ஓவியப் போட்டியில் 69 மாற்றுத்திறனாளிகள் பங்கு பெற்றதில் வெற்றி பெற்ற 17 நபர்களுக்கு ரொக்க பரிசாக முதல் பரிசு ஆயிரம் இரண்டாம் பரிசு 500 மற்றும் மூன்றாம் பரிசாக 250 வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர் தன் விருப்பநிதியிலிருந்து கூடுதலாக ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  ரொக்க பரிசு பத்தாயிரம் ரூபாய் வழங்கினார்.  முதல் பரிசு 5000 இரண்டாம் பரிசு 3 ஆயிரம் மூன்றாம் பரிசாக 2000 வழங்கப்பட்டது.
மத்திய அரசின் ஏ டி ஐ பி மற்றும் ராஷ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ் அலிம்கோ நிறுவனத்தின் மூலமாக 264 பயனாளிகளுக்கு 25.56 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் விளையாட்டுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு என மொத்தமாக 458 பயனாளிகளுக்கு ரூபாய் 25 லட்சத்து 76 ஆயிரத்து 750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கண்ணன் , துறை சார்ந்த அரசு அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,  உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கு பெற்றனர்.