Categories

60 ஆண்டு கால நிலவியல் பாதை ஆக்கிரமிப்பு – நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி ஆர்.டி.ஓ-விடம் பொதுமக்கள் மனு

60 ஆண்டு கால நிலவியல் பாதை ஆக்கிரமிப்பு – நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி ஆர்.டி.ஓ-விடம் பொதுமக்கள் மனு

தர்மபுரி ஜன 30,
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், நம்பிப்பட்டி அருகே உள்ள
விஜியநகரம் கிராமத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டிலுள்ள
பொது நிலவியல் பாதையை ஆக்கிரமித்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இது தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தியும் அரூர் வருவாய் கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

விஜியநகரம் கிராமத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.



இவர்கள் தங்கள் விவசாய நிலங்களுக்குச் செல்லவும், விளைபொருட்களை ஏற்றிச் செல்லவும் காலங்காலமாக கீழ்க்கண்ட புல எண்களைக் கொண்ட நிலவியல் பாதையை பயன்படுத்தி வருகின்றனர்:
புல எண்கள்: 150/4A, 126/2A, 126/1B4, 126/1B1, 151/1C1, 151/1A, 150/1A2, 150/3A1, 150/3B1, 152/6A1, 152/6C1.

தற்போது விஜியநகரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜி, கோமதி, கலையரசி மற்றும் நல்லம்மாள் ஆகியோர் இந்தப் பொதுப் பாதையை ஆக்கிரமித்து பாதையில் செல்ல விடாமல் ஆக்கிரமித்துள்ளனர்

பள்ளி மாணவர்கள் பாதிப்பு:

பாதை மறிக்கப்பட்டுள்ளதால்,கடந்த ஒரு வாரமாக பள்ளி செல்லும் குழந்தைகள்பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கின்றனர் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால்
நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.


விவசாயப் பணிகள் முடக்கம்:

டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாததால் விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அவசர கால சேவை: மருத்துவ அவசரங்களுக்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாத சூழல் நிலவுகிறது.


நீதிமன்ற உத்தரவும் மெத்தனப்போக்கும்:


இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அரசு நிலஅளவையர் (Surveyor) மூலம் நிலம் அளவீடு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும், வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கோரிக்கை:

நீதிமன்ற உத்தரவை மதித்து, ஏற்கனவே அரசு அளவீடு செய்துள்ளபடி நிலவியல் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, பொதுமக்களின் போக்குவரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என ஆர்.டி.ஓ-விடம் அளித்துள்ள மனுவில் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.