
தர்மபுரி மார் 20,
அரசு திட்டப் பெயரைப் பயன்படுத்தி
ரூ. 29.63 லட்சம் மோசடி:
தொண்டு நிறுவன ஊழியர் மீது போலீசில் புகார்

தர்மபுரி மாவட்ட புதுவாழ்வு திட்டத்தின் பெயரைப் பயன்படுத்தி, மலைவாழ் மக்களிடம் இருசக்கர வாகனம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 29.63 லட்சம் மோசடி செய்த தனியார் தொண்டு நிறுவன ஊழியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு

தர்மபுரி மாவட்டம், அரூர் காவல் எல்லைக்குட்பட்ட கலசப்பாடி மற்றும் அரசநத்தம் ஆகிய மலைக் கிராமங்களில் தனியார் நிறுவனம் சார்பில் மாலைநேர கற்றல் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தின் நிறுவனராகப் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்பன் (44) என்பவர் செயல்பட்டு வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் 29-ஆம் தேதி கலசப்பாடி கிராமத்திற்குச் சென்ற ஐயப்பன், அங்குள்ள மக்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார்.
அரசு வழங்கும் ‘புதுவாழ்வு திட்டத்தின்’ கீழ் மானிய விலையில் வாகனங்கள் வழங்கப்படுவதாகத் தெரிவித்து,
ரூ. 10,000 செலுத்தினால் பெண்களுக்கு ‘ஸ்கூட்டி’ ரக வாகனமும், ரூ. 20,000 செலுத்தினால் ஆண்களுக்கு ‘கியர்’ வசதி கொண்ட இரு சக்கர வாகனமும் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளார்.
இதனை நம்பிய அரசநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் இவருக்கு முகவர்களாகச் செயல்பட்டுள்ளனர்.
இவர்களை நம்பி கலசப்பாடி, அரசநத்தம், ஆலமரத்துவளவு, கோட்டக்காடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 119 மலைவாழ் மக்கள் பணம் செலுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த தகவலின்படி:
நேரடியாகக் கையில் கொடுத்தது:
ரூ. 17.20 லட்சம்
வங்கி கணக்கு மூலம் செலுத்தியது:
ரூ. 3.48 லட்சம்
கூகுள் பே (G-Pay) வாயிலாக அனுப்பியது: ரூ. 8.95 லட்சம் (தோராயமாக)
மொத்த மோசடித் தொகை: ரூ. 29.63 லட்சம் ஆகும்.
கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி வாகனங்கள் வழங்கப்படும் என ஐயப்பன் உறுதியளித்திருந்தார். ஆனால், குறிப்பிட்ட தேதியில் வாகனங்கள் வழங்கப்படவில்லை.
இது குறித்து அவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது செல்போன் அணைக்கப்பட்டு (Switch Off) இருந்தது.
இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கலசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த வேடன் என்பவர் அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில்,
அரசு திட்டப் பெயரைத் தவறாகப் பயன்படுத்தித் தங்கள் பணத்தைச் சுருட்டிச் சென்ற ஐயப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் அரூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஐயப்பனை தீவிரமாகத் தேடி வருவதாக கூறப்படுகிறது.
புகார் கொடுக்கப்பட்டு பல வாரங்கள் முடிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.















Leave a Reply