
*அரூர், அக்.16-*
தருமபுரி மாவட்டம் அரூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் மலைத் தேனீக்கள் நீண்ட நாட்களாக கூடு கட்டி வசித்து வருகின்றன. இந்நிலையில் கட்டிட பராமரிப்பு பணிக்காக தருமபுரி அருகே உள்ள தேவரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த 13 கூலித் தொழிலாளர்கள் நேற்று கல்லூரிக்கு வந்தனர்.

இன்று காலை உணவு செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்து போது, புகையின் காரணமாக திடீரென கல்லூரி கட்டிடத்தில் இருந்த தேனீக் கூட்டிலிருந்து மலைத் தேனீக்கள் வெளியேறி 13 பேரையும் சுற்றி வளைத்து கொட்டியுள்ளன.

இதில் காயமடைந்த அவர்கள் அங்கிருந்து தப்பி அருகில் உள்ள அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரூர் அரசு கலைக் கல்லூரி அருகே அரசு போக்குவரத்து பணிமனை, தூய இருதய ஆண்டவர் ஆலயம், அரசு மருத்துவமனை என பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
மேலும் இன்று கல்லூரி திறந்திருப்பதால், கட்டிடத்தில் உள்ள மலைத் தேனீக்கள் மாணவ, மாணவிகளை எப்போது வேண்டுமானாலும் கொட்டுவதற்கு வாய்ப்புள்ளது.

எனவே அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன் வருவாய்த் துறையும், தீயணைப்புத் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து மலைத் தேனீ கூடுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி ஆசிரியர் –
இளம்பருதி – +919942030530













Leave a Reply