
*அரூர், அக்.16-*
தமிழ்நாடு ஆதிதிராவிடர் கூட்டமைப்புகள் சார்பில் இடஒதுக்கீடு கோரி மாபெரும் மாநாடு அரூர் ஆசியா மஹாலில் நடைபெற்றது.
வழக்கறிஞர் எம்.கே.நடராஜன் தலைமை வகித்தார். மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் மா.சிவராஜ் முன்னிலை வகித்தார்.
இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் உழவர் பேரியக்க மாநில தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இல.வேலுசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது:
*உறுப்பினர் அட்டையில் அம்பேத்கர் படத்தை போட்ட முதல் கட்சி பா.ம.க.*
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய உடனேயே உறுப்பினர் அட்டையில் அம்பேத்கர் படத்தை போட்டது பா.ம.க. தான். அக்கட்சி மீது விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இந்த மக்களுக்காக பா.ம.க. செய்த பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது.
*2008 இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் டாக்டர் அன்புமணி – பாராட்டிய திருமாவளவன்*
2008-ம் ஆண்டு மத்தியில் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் எங்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தான். அதற்காக அகில இந்திய அளவில் பூட்டா சிங் உட்பட 32 அமைப்புகளின் தலைவர்கள் சென்னையில் அவருக்கு பாராட்டு விழா நடத்தினர். அதில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களும் கலந்து கொண்டு பாராட்டினார்.
*ஆதிதிராவிடர் மீது கை வைத்தால் வன்னியர் சமுதாயம் வேடிக்கை பார்க்காது – டாக்டர் ராமதாஸ்*
1990-ல் இங்கு பெரும் கலவரம் நடந்தபோது பல ஆதிதிராவிட கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அப்போது மதிப்பிற்குரிய வழக்கறிஞர் அவர்களும், மறைந்த ஐயா பி.வி.கரியம்மாள் அவர்களும், இனமுரசு கோபால் அவர்களும் திண்டிவனம் சென்று டாக்டர் அய்யா அவர்களிடம் முறையிட்டனர்.
அப்போது நான் கல்லூரி மாணவன். உடனடியாக ஆதிதிராவிடர் ஒற்றுமை மாநாடு நடத்த வேண்டும் என ஐயா உத்தரவிட்டார். அந்த மாநாட்டில், “இனி ஒரே ஒரு ஆதிதிராவிடர் தோழர் மீது கை வைத்தால், என் வன்னியர் சமுதாயம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது” என்றார். மறுநாளே கலவரம் நின்றது.
வன்னியர் சங்கம் நடத்திய முதல் மாநாட்டில் முதல் தீர்மானம் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு, இரண்டாவது தீர்மானமே தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18%-ல் இருந்து 22% ஆக உயர்த்த வேண்டும் என்பதுதான்.
*தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர் முதல்வரானது உண்டா?*
சுதந்திரம் அடைந்து இத்தனை ஆட்சிகள் மாறியும் இந்த மக்கள் முன்னேற்றம் அடைந்தார்களா? இல்லை. உத்தரபிரதேசத்தில் மாயாவதி போல தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர் ஒரு நாள் கூட முதல்வரானது உண்டா? தி.மு.க., அ.தி.மு.க.வில் அமைச்சர்களாக இருந்தாலும் அதிகாரம் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் பட்டியல் சாதியினருக்கு இடஒதுக்கீடு, தென்பெண்ணை நீரை அரூர் ஏரிகளுக்கு நிரப்புதல், பஞ்சமி நில மீட்பு, *புதிய அரூர் மாவட்டம்*, அரூரில் அரசு சேகோ தொழிற்சாலை, நீட் ரத்து, பூரண மதுவிலக்கு உள்ளிட்டவை அடங்கும்.
செய்தி ஆசிரியர்
இளம்பருதி
+919942030530













Leave a Reply