Categories

தமிழ்நாடு ஆதிதிராவிடர் கூட்டமைப்புகள் சார்பில் இடஒதுக்கீடு கோரி மாபெரும் மாநாடு*


*அரூர், அக். 15 -*

தமிழ்நாடு ஆதிதிராவிடர் கூட்டமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் இடஒதுக்கீடு கோரி மாநாடு, அரூரில் உள்ள ஆசியா மஹாலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம்மாநாட்டில் அடிப்படை உரிமை, சமூக நீதி இடஒதுக்கீடு, ஆதிதிராவிடர்களுக்கு 12 சதவீதம் உள் இடஒதுக்கீடு, வள்ளுவர், குறவன் உள்ளிட்ட 70 பட்டியல் இன மக்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு மற்றும் கூட்டுறவுத் துறைகளிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

*மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:*



ஆதிதிராவிடர்களில் பறையர் இன மக்களுக்கு 12 விழுக்காடு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் கூட்டுறவுத் துறைகளில் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
ஆதிதிராவிடர்களில் பறையர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் (பள்ளர்), வள்ளுவர், குறவன் உட்பட சுமார் 70 பட்டியலின சாதியினருக்கு 25 விழுக்காடு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் கூட்டுறவுத் துறைகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தென்பெண்ணை ஆற்றில் மழைக்காலங்களில் வீணாகி கடலில் கலக்கும் மழைநீரை, ராட்சத குழாய்கள் மூலம் நீரேற்றி, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களில் உள்ள ஏரிகளுக்கு முறையாக நிரப்ப வேண்டும்.
விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும்.
மீட்கப்படாத நிலையில் உள்ள பஞ்சமி நிலங்கள், இடைத்தரகர்களால் இருதரப்பிலும் பணம் பெற்றுக்கொண்டு கிடப்பில் போடப்பட்டுள்ளன. தமிழக அரசு இருதரப்பையும் முறையாக அழைத்துப் பேசி, உரியவர்களிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக அத்துறைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு துறைகளுக்கு எக்காரணம் கொண்டும் மாற்றக்கூடாது.
ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்கள், அரசுப் பள்ளிகளில் காமராஜர் காலை உணவுத் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் ஆகியோருக்கு பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, ஊத்தங்கரை ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கி, அரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய அரூர் மாவட்டத்தை உருவாக்க வேண்டும்
பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசுப் பள்ளிகளில் கராத்தே வகுப்பை கட்டாயமாக்க வேண்டும்.
மது இல்லாத தமிழகத்தை உருவாக்க, மத்திய அரசின் நிதி உதவியுடன் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவப் படிப்பை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தில் சாதிப் பெயர்களைக் கொண்ட கிராமங்களின் பெயர்களை நீக்கி, புதிய பெயர்களை சூட்ட வேண்டும்.
தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் விவசாயிகளால் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் மரவள்ளிக் கிழங்கிற்கு முறையான விலை கிடைக்க, அரூர் பகுதியில் அரசு சேகோ தொழிற்சாலை நிறுவப்பட வேண்டும்.
சிறுவர், சிறுமியர் நீச்சல் தெரியாததால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுகிறது. அதனைத் தடுக்கும் வகையில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஒரு நீச்சல் குளம் கட்டப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வழக்கறிஞர் எம்.கே. நடராஜன் தலைமையில் நடைபெற்ற இடஒதுக்கீடு கோரிக்கை மாநாட்டில், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் மா. சிவராஜ், தேசிய மக்கள் கட்சி நிறுவனர் இனமுரசு கோபால், வி.எஸ். குமரேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் சி.கே. சாக்கன் சர்மா, தமிழ்நாடு பறையர் பேரவை நிறுவனர்
கே. கதிரவன், பாட்டாளி மக்கள் கட்சி உழவர் பேரியக்கத்தின் மாநிலத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
இல. வேலுசாமி, வரலாற்று ஆசிரியர் எரிமலை ராமச்சந்திரன், எழுத்தாளர் அருள் முத்துக்குமரன், தி.மு.க. மாநில துணைச் செயலாளர் ராஜேந்திரன், திராவிடர் கழக மாவட்டப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் எம்.எஸ். மூவேந்தன்,
ராமலிங்கம்,
கேசவன், தீரன், தீர்த்தகிரி, சின்னத்தம்பி ஜெய்சாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி ஆசிரியர்

இளம்பருதி

+919942030530