
புதுச்சேரி, டிச.9–
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின்னர் 72 நாள்களுக்கு பிறகு புதுச்சேரியில் நேற்று திறந்தவெளி பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம் செய்தார். இந்த கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு நபரால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு 2026 சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி த.வெ.க.(தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 13–ஆம் தேதி தனது பிரசாரத்தை தொடங்கினார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பிரசாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி பிரசாரம் நடைபெற்ற நிலையில் 3–வது வார சனிக்கிழமையில் அதாவது செப்டம்பர் 27–ஆம் தேதி கரூரில் நடந்த பிரசாரத்தின் போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100–க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அதைத்தொடர்ந்து அவரது பிரசாரம் முடங்கியது. அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து அவர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து பேசினார். அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். அதைத்தொடர்ந்து காஞ்சிபுரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடர்ந்தார்.
பின்னர் சேலத்தில் ரோடுஷோ மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டார். ஆனால் கார்த்திகை மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை காரணம் காட்டி போதிய பாதுகாப்பு வழங்க முடியாது என கூறி அனுமதி அளிக்க போலீசார் மறுத்து விட்டனர். இதனால் அங்கு பிரசாரம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அதன் பின்னர் ஈரோட்டில் பிரசாரம் நடத்த த.வெ.க.வினர் ஏற்பாடு செய்தனர். அங்கும் பாதுகாப்பு காரணமாக பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது வேறு இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
இது போன்று தொடர்ந்து சிக்கல் ஏற்பட்ட நிலையில் புதுச்சேரியில் கடந்த 5–ஆம் தேதி ரோடுஷோ மற்றும் பொதுக்கூட்டம் நடத்த த.வெ.க.வினர் அனுமதி கேட்டனர். அங்கும் கரூர் சம்பவத்தை காரணம் காட்டி ரோடுஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது.
அதற்காக போலீசார் பல நிபந்தனைளை விதித்தனர். அதாவது பிராசர பொதுக்கூட்டத்தில் புதுச்சேரியை சேர்ந்த கியூஆர் கோடு பாஸ் வைத்திருக்கும் 5000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அண்டை மாநிலமான தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கூட்டம் நடைபெறும் மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். சிறுவர்கள்,கர்ப்பிணிகள்,முதியவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி இல்லை.
மேலும் பொதுக்கூட்டம் நடத்த மேடை அமைக்கவும்,மேஜை நாற்காலிகள் போடவும், அனுமதி இல்லை. விஜய் பிரசார வாகனத்தில் இருந்து மட்டுமே பேச வேண்டும் என்றும் போலீசார் கட்டுப்பாடுகள் விதித்தனர். இவற்றை ஏற்றுக்கொண்ட த.வெ.க.வினர் புதுச்சேரியில் இன்று விஜயின் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்தனர். அதைத்தொடர்ந்து 73 நாள்களுக்கு பிறகு பொதுவெளியில் நடைபெறும் விஜயின் பிரசார பொதுக்கூட்டம் புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு விஜய் பேசினார். இதற்காக அவர் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று காலை கார் மூலம் புதுச்சேரி வந்தடைந்தார். பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் மேடை எதுவும் அமைக்கப்படவில்லை. எனவே, பிரசார வேனில நின்றபடியே விஜய் பேசினார்.
விஜயின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில் ஏராளமானோர் திரண்டனர்.
இவர்களில் கியூஆர் கோடு பாஸ் வைத்திருந்த 5000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பொதுக்கூட்டத்திற்கு வந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு பாஸ்க்கு 2 பேர் அனுமதிக்கபடுவர் என த.வெ.க.வினர் கூறியதாகவும், ஆனால் போலீசார் ஒருவரை மட்டுமே செல்ல அனுமதித்ததாகவும் கூறி தகராறு செய்தனர். மேலும் கியூஆர் கோடு பாஸ் இல்லாத ஏராளமானோர் பொதுக்கூட்டம் நடைபெற்ற உப்பளம் மைதானத்திற்கு வெளியே திரண்டு நின்று எங்களை உள்ளே விடுங்க என போலீசாரிடம் கெஞ்சினர்.ஆனால் கியூஆர் கோடு பாஸ் இல்லாதவர்கள் உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
பொதுக்கூட்டம் நடைபெற்ற மைதானத்திற்கு செல்பவர்கள் மெட்டல் டிடெக்டர் வாசல் வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது ஒருவர் சென்ற போது மெட்டல் டிடெக்டர் கருவி பீம்…பீம்… என சத்தமிட்டது. அதைத்தொடர்ந்து அந்த நபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போ து அவர் தனது இடுப்பில் ஒரு கை துப்பாக்கியை செருகிய நிலையில் வைத்திருந்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.














Leave a Reply