Categories

16 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகனை மீட்ட போலீசார் – பெற்றோரிடம் ஒப்படைப்பு: தருமபுரியில் நெகிழ்ச்சி

தர்மபுரி அக்14,

16 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளைஞரை தருமபுரி நகர போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனால் நெகிழ்ச்சியடைந்த குடும்பத்தினர் கண்ணீர் மல்க போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

தருமபுரி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலி வேலை செய்து வந்த இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மகன் தீபக் ராஜா, 15 வயதில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

சிறுவன் காணாமல் போனதைத் தொடர்ந்து குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்துள்ளனர். பல ஆண்டுகளாக அவரைப் பற்றிய தகவல் கிடைக்காததால் குடும்பத்தினர் மிகுந்த வேதனையில் இருந்து வந்தனர். மனவேதனையில் இருந்த தந்தை ராஜேந்திரன், கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இந்நிலையில், காணாமல் போன தீபக் ராஜா திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து, தருமபுரி நகர காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் அவரைக் கண்டுபிடித்து, உரிய விசாரணை மற்றும் அடையாள உறுதிப்படுத்தலுக்குப் பிறகு அவரது தாயாரிடம் ஒப்படைத்தனர்.

15 வயதில் காணாமல் போன மகன், 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிடைத்ததால் அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டனர்.

தந்தை இறந்த செய்தியைக் கேட்டு மகன் தீபக் ராஜா கதறி அழுத சம்பவம், அங்கிருந்தவர்களின் கண்களைக் கலங்கச் செய்தது.

நீண்ட காலமாக பிரிந்திருந்த குடும்பத்தை மீண்டும் இணைத்த போலீசாரின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.