
கோவை அக் 25,
திருப்பூரில் காய்ச்சல் சிகிச்சைக்குப் பிறகு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை: தொடர் வலிப்பு மற்றும் மாரடைப்பால் சிறுவன் உயிர் பிரிந்த துயரம்..
கோவை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், டெங்கு காய்ச்சல் மற்றும் தீவிர உடல்நலக் குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம், குங்குமம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவரின் 4 வயது மகனான தமிழ் (IP 110252) என்ற சிறுவனுக்கு கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி திடீரெனக் காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.
இதனைக் கண்ட பெற்றோர்கள் உடனடியாகப் பல்லடத்தில் உள்ள ‘ஸ்ரீ ராகமணி கிளினிக்’ (Sri Ragamani Clinic) மருத்துவமனைக்குக் குழந்தையை அழைத்துச் சென்று உள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் காய்ச்சலுக்கான மருந்துகள் வழங்கியதோடு, இரத்தப் பரிசோதனைகளும் மேற்கொண்டனர்.
ஆரம்பகட்டப் பரிசோதனைகளில் ரத்த அணுக்கள் இயல்பான அளவில் (WBC: 6900, Platelets: 2.56 Lakhs) இருந்ததால், வெளிநோயாளியாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பி உள்ளனர்.
அக்டோபர் 21: குழந்தைக்குக் காய்ச்சல் விட்டபாடில்லை. இதனால் மீண்டும் அதே கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, நரம்பு வழி நீர்ச்சத்து (IV fluids) செலுத்தப்பட்டு வீடு திரும்பி உள்ளனர்.
அக்டோபர் 22: காய்ச்சலுடன் குழந்தைக்குத் தீவிர வாந்தியும் ஏற்பட்டு உள்ளது. இதனால் மீண்டும் அனுமதிக்கப்பட்டு இரத்தப் பரிசோதனை செய்த போது, ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை (Platelets: 1.37 Lakhs) குறையத் தொடங்கியது தெரியவந்தது.
அன்றைய தினம் மாலை 7.30 மணி அளவில் குழந்தைக்குத் திடீரென வலிப்பு (Seizure) ஏற்பட்டு உள்ளது. உடனடியாக ‘மிடராசோலம்’ (Midazolam) நாசல் ஸ்பிரே கொடுக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள ‘எஸ்.வி. கிளினிக்’கிற்கு (S.V Clinic) அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.
எஸ்.வி. கிளினிக் வந்தடைந்த போது குழந்தைக்குத் தொடர் வலிப்புடன் இரத்த ஓட்டச் சீரின்மையும் (Circulatory failure) இருந்தது கண்டறியப்பட்டது.
உடனடியாக நரம்பு வழி திரவங்கள் மற்றும் ரத்த அழுத்தத்தைச் சீராக்கும் மருந்துகள் (Inotropes) வழங்கப்பட்டன.
அங்கு செய்யப்பட்ட மேற்கண்ட பரிசோதனைகளில் ரத்த தட்டணுக்களின் அளவு மேலும் குறைந்து 66,000 ஆகச் சரிந்து இருந்தது.
குறிப்பாக, NS1 ஆன்டிஜென் பரிசோதனையில் குழந்தைக்கு டெங்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு வைத்து குழந்தைக்கு இரண்டாவது முறை வலிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் குழந்தை கொண்டு வரப்பட்ட போது, ஏற்கனவே தொடர் வலிப்பால் பாதிக்கப்பட்டு, ரத்த அழுத்தமும் சீராக இல்லாத நிலையில் (Circulatory failure) மிகவும் கவலைக்கிடமாக இருந்து உள்ளார்.
மருத்துவர்கள் உடனடியாக நரம்பு வழி திரவங்கள் மற்றும் உயர் ரத்த அழுத்த மருந்துகள் மூலம் தீவிர சிகிச்சையைத் தொடங்கினர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தைக்கு மூன்றாம் முறையாக மீண்டும் வலிப்பு ஏற்பட்டது.
சுவாச மண்டல அழற்சி தீவிரம் அடைந்ததால் (Respiratory failure) உடனடியாக ‘இன்டூபேட்’ (Intubate) செய்யப்பட்டு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது.
இரத்த ஓட்டத்தைச் சீராக்கவும், தொற்றைக் கட்டுப்படுத்தவும் உயர் ரத்த எதிர் மருந்துகள் (Higher antibiotics) மற்றும் தேவையான ரத்தப் பொருட்கள் (Blood products) செலுத்தப்பட்டன.
ஆனாலும், மருத்துவர்களின் தொடர் தீவிர முயற்சிக்குப் பலனின்றி, மாரடைப்பு (Cardiac arrest) ஏற்பட்டு கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி மாலை 7.35 மணிக்குச் சிறுவன் தமிழ் பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
ஆரம்பக் காய்ச்சலாகத் தொடங்கி டெங்கு மற்றும் அதன் தீவிரச் சிக்கல்களால் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களையும் பெற்றோரையும் முடியாத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.














Leave a Reply